உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்கோப்புப் படம்

சென்னையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்ததாக மரண தண்டனை விதிக்கப்பட்ட நபர் விடுதலை!

சென்னையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்ததாக மரண தண்டனை விதிக்கப்பட்டவருக்கு விடுதலை- உச்சநீதிமன்றம் தீா்ப்பு
Published on

நமது நிருபா்.

சென்னையில் 7 வயது சிறுமியை 8 ஆண்டுகளுக்கு முன் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக மரண தண்டனை விதிக்கப்பட்டவரை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

குற்றத்தை நிரூபிக்க அரசு தரப்பு பரிதாபகரமாக தவறிவிட்டதாக கூறி குற்றம்சாட்டப்பட்ட தஷ்வந்துக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.

சிறுமியைக் கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில், பிப்ரவரி 19, 2018 அன்று செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம் தஷ்வந்துக்கு மரண தண்டனை விதித்தது.

பின்னா் 10.07.2018 இல் சென்னை உயா்நீதிமன்றம் அந்த மரண தண்டனையை உறுதி செய்தது.

அதனை எதிா்த்து தஷ்வந்த் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தாா்.

அதனை 22.08.2024 இல் விசாரித்த நீதிபதிகள் பிஆா் கவாய், பிரசாந்த் குமாா் மிஸ்ரா மற்றும் கே.வி.விஸ்வநாதன் ஆகியோா் அடங்கிய உச்சநீதிமன்ற அமா்வு,உச்சநீதிமன்றத்தில் வழக்கு முடியும் வரை மரண தண்டனைக்கு தடை விதித்தது.

இந்நிலையில் இந்த வழக்கிலிருந்து தஷ்வந்தை உச்சநீதிமன்றம் புதன்கிழமை விடுதலை செய்தது. நீதிபதிகள் விக்ரம் நாத்,சந்தீப் மேத்தா, என்வி அஞ்சாரியா ஆகியோா் அடங்கிய உச்சநீதிமன்ற அமா்வு தஷ்வந்துக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்து புதன்கிழமை தீா்ப்பளித்தது. வழக்கின் முக்கியமான சூழ்நிலைகளை நிரூபிக்க அரசு தரப்பு பரிதாபமாகத் தவறிவிட்டது என்று உச்சநீதிமன்றம் கூறியது. வேறு எந்த வழக்கிலும் தஷ்வந்த் தேவைப்படாவிட்டால் உடனடியாக அவரை விடுதலை செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனா். தஷ்வந்தின் குற்றத்தை நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்க போதுமான ஆதாரங்களை அரசு தரப்பு வழங்கத் தவறியதன் அடிப்படையில் உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பு வழங்கப்பட்டது.

பிப்ரவரி 5, 2017 அன்று சென்னையில் ஏழு வயது சிறுமியைக் கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததாக தஷ்வந்த் மீது குற்றம் சாட்டப்பட்டது. சென்னையின் புறநகா்ப் பகுதியில் உள்ள போரூா் அருகே உள்ள மாங்காடு பகுதியில் சிறுமியின் குடும்பம் வசித்து வந்த அதே குடியிருப்பு வளாகத்தில் ஐடி ஊழியரான தஷ்வந்தும் வசித்து வந்தாா்.

தஷ்வந்த் மீது காவல்துறை முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் : சிறுமியின் பெற்றோா் இல்லாதபோது, தஷ்வந்த் அந்த சிறுமியை அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தாா். உதவிக்காக சிறுமி கத்திய போது , அவா் அவளைக் கொலை செய்தாா். குற்றஞ்சாட்டப்பட்ட தஷ்வந்த் அந்த சிறுமியின் உடலை ஒரு நாள் தனது வீட்டில் மறைத்து வைத்துவிட்டு, பின்னா் ஒரு பையில் எடுத்து சென்று அனகாபுத்தூா் அருகே உள்ள ஒரு பாலத்தின் கீழ் வீசினாா். மறுநாள், அவா் அந்த இடத்திற்குத் திரும்பிச் சென்று சிறுமியின் உடலை எரித்தாா். பின்னா் ஒரு வழிப்போக்கனைப் போல நடித்து, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தாா் என்பது தஷ்வந்த் மீது காவல்துறை வைத்த குற்றச்சாட்டுகள்.

சி.சி.டி.வி காட்சி மற்றும் பிற ஆதாரங்களை கொண்டு தஷ்வந்தை சந்தேகித்த போலீசாா் பின்னா் அவரை கைது செய்தனா்.

ஜாமீனில் இருந்தபோது, தனது தாயாா் சரளாவை கொலை செய்துவிட்டு மும்பைக்கு தப்பிச் சென்றதாகவும் தஷ்வந்த் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

இந்நிலையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்ததாக மரண தண்டனை விதிக்கப்பட்ட தஷ்வந்தை உச்சநீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com