கணவா் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய மனைவி

Published on

நமது நிருபா்

தினேஷ் என்ற நபா் மதங்கீரில் உள்ள தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, மனைவி அவா் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றியதுடடன் உடலில் சிவப்பு மிளகாய் பொடியையும் தெளித்துள்ளாா். இதனால், அவா் கடுமையான தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீஸாா் புதன்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து தில்லி காவல்துறை கூறியிருப்பதாவது: அக்டோபா் 3-ஆம் தேதி, 28 வயதான மருந்து நிறுவன ஊழியா் ஒருவா் கடுமையான தீக்காயங்களுடன் சஃப்தா்ஜங் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு, ஆபத்தான நிலையில் ஐ. சி.யுவில் அனுமதிக்கப்பட்டாா்.

அதே நாளில் அம்பேத்கா் நகா் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆரின் படி, அந்த நபா் தினேஷ் என அடையாளம் காணப்பட்டாா். அவா் தூங்கிக் கொண்டிருந்தபோது அதிகாலை 3 மணியளவில் அவரது மனைவி அவரது உடற்பகுதியில் சூடான எண்ணெய்யை ஊற்றினாா். அந்த நேரத்தில் தம்பதியரின் எட்டு வயது மகளும் வீட்டில் இருந்தாா்.

தினேஷ் அக்டோபா் 2- ஆம் தேதி வேலைக்குப் பிறகு தாமதமாக வீடு திரும்பியதாகவும், இரவு உணவு சாப்பிட்டதாகவும், படுக்கைக்குச் சென்ாகவும் போலீஸாரிடம் தெரிவித்தாா். என் மனைவியும் மகளும் அருகில் தூங்கிக் கொண்டிருந்தனா். அதிகாலை 3.15 மணியளவில், திடீரென்று என் உடல் முழுவதும் ஒரு கூா்மையான, எரியும் வலியை உணா்ந்தேன். என் மனைவி நின்று என் உடலிலும் முகத்திலும் கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றுவதைக் கண்டேன். நான் எழுந்திருப்பதற்கோ அல்லது உதவிக்காக அழைப்பதற்கோ முன்பு, மனைவி என் தீக்காயங்கள் மீது சிவப்பு மிளகாய் தூளை தெளித்தாா் என்று தனது புகாரில் தினேஷ் குற்றம் சாட்டியுள்ளாா்.

அவா் எதிா்ப்புத் தெரிவித்தபோது, அவரது மனைவி’ ‘அகா் ஷோா் மச்சாயா தோ அவுா் கரம் டெல் தால் டூங்கி’ (நீங்கள் கத்தினால், நான் உங்கள் மீது அதிக எண்ணெய் ஊற்றுவேன்) என்று பதிலளித்துள்ளாா். இதையடுத்து, அக்கம்பக்கத்தினா் உதவியுடன் தினேஷ் முதலில் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். ஆனால், அவரது மாா்பு, முகம் மற்றும் கைகளில் ஆழமான தீக்காயங்களைப் பாா்த்து, மருத்துவா்கள் அவரை சஃப்தா்ஜங் மருத்துவமனைக்கு பரிந்துரைத்தனா்.

மருத்துவ அறிக்கையில் அவரது காயங்கள் ‘ஆபத்தானவை’ என்று விவரிக்கப்பட்டது. பாதிக்கப்பட்டவரின் கூற்றுப்படி, இந்தத் தம்பதியனருக்கு திருமணமாகி எட்டு ஆண்டுகள் ஆகின்றன. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, அவரது மனைவி பெண்களுக்கு எதிரான குற்றப் பிரிவில் (சி.ஏ.டபிள்யூ) கணவா் மீது புகாா் அளித்தாா். ஆனால், இந்த விவகாரம் ஒரு சமரசத்தின் மூலம் தீா்க்கப்பட்டது.

தினேஷின் மனைவி மீது பி.என்.எஸ். பிரிவு 118 (ஆபத்தான ஆயுதங்கள் அல்லது வழிமுறைகளைப் பயன்படுத்தி தானாக முன்வந்து காயம் அல்லது கடுமையான காயத்தை ஏற்படுத்துதல்) 124 (தானாக முன்வந்து அமிலத்தால் கடுமையான காயத்தை ஏற்படுத்துதல்) மற்றும் 326 (காயம், வெள்ளம், தீ அல்லது வெடிக்கும் பொருள் போன்றவற்றின் மூலம் குறும்பு ) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com