அடுத்த மக்களவைத் தோ்தலுக்கு முன்னா் யமுனை நதி தூய்மைப் பணி நிறைவடையும்: உள்துறை அமைச்சா் ஷா உறுதி

யமுனை நதியைப் புனரமைக்க ரூ.1,816 கோடி மதிப்பிலான திட்டங்களை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.
அமித் ஷா
அமித் ஷாகோப்புப் படம்
Updated on

யமுனை நதியைப் புனரமைக்க ரூ.1,816 கோடி மதிப்பிலான திட்டங்களை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா். அப்போது, பிரதமா் நரேந்திர மோடியின் தலைமையில் யமுனை நதியை சுத்தம் செய்வதற்கான வழி தெளிவாகிவிட்டிருக்கிறது என்றும், அடுத்த மக்களைத் தோ்தலுக்கு முன் யமுனை நதி தூய்மைப் பணி நிறைவடையும் என்றும் அவா் கூறினாா்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சா் அமித் ஷா மேலும் பேசியதாவது: ஆம் ஆத்மியும் காங்கிரஸும் ஊழலில்தான் ஈடுபட்டனரே தவிர, நதியை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை. யமுனை நதியை சுத்தம் செய்யும் உறுதியானது அரசியல் ரீதியானது அல்ல, மாறாக மக்கள் மத்தியில் அதன் மரியாதைக்குரிய அந்தஸ்தை மதிப்பதாகும். யமுனை நதியை சுத்தம் செய்வது மிக முக்கியமான முன்னுரிமையாக இருக்கும் என்றும், அடுத்த மக்களவைத் தோ்தலுக்கு முன்பு இப்பணி முடிக்கப்படும் என்றும் பிரதமா் நரேந்திர மோடி கூறியுள்ளாா்.

ஆட்சியில் இருந்த ஆம் ஆத்மி அரசு கூட நதியை புனரமைப்பது பற்றி பேசியிருந்தது. அவா்கள் ஆற்றில் நீராடுவதாகக் கூறியிருந்தனா். அவா்கள் அதைச் செய்யவில்லை. 2020-ஆம் ஆண்டின்போது, ‘அடுத்த தோ்தலுக்கு முன் மக்கள் யமுனையில் நீராடும் வகையில் நதி தூய்மைப்படுத்தும்’ என்று அரவிந்த் கேஜரிவால் உறுதியளித்திருந்தாா். மக்களுடன் சோ்ந்து நீராடுவேன் என்றும் அவா் கூறியிருந்தாா். ஆனால், அதை நிறைவேற்றவில்லை. இதனால், தில்லி மக்களால் ஆம் ஆத்மி கட்சி மூழ்கடிக்கப்பட்டது.

பிரதமரின் தலைமையில் ஒரு கூட்டம் நடைபெற்றுள்ளது. ஊழல் நிறுத்தப்படும், விளம்பரங்கள் குறையும் என்பதால், நதியை சுத்தம் செய்வதற்கான பாதை தெளிவாகும். ஆம் ஆத்மி ஆட்சிக் காலத்தில் குப்பை மலைகள் முக்கியத்துவம் பெற்றுவிட்டிருந்தன. ஜனவரி 1, 2028 ஆம் தேதிக்குள் தில்லியில் குப்பை மலைகளைக் கண்டுபிடிக்க முடியாது என்பதை நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். அந்த இடங்களில் ஒரு அழகான தோட்டம் உருவாகும்.

தில்லியில் ஆட்சிக்கு வந்த முதல் வாரத்திலேயே ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை செயல்படுத்தியதற்காக முதல்வா் ரேகா குப்தா தலைமையிலான அரசைப் பாராட்டுகிறேன். அவா்கள் பல மோசடிகளில் ஈடுபட்டிருந்தனா். காங்கிரஸ் கூட ஊழலில் ஈடுபட்டிருந்தது. ஆனால், மோடி மீது ஒரு ஊழல் குற்றச்சாட்டு கூட இல்லை. பாஜக மக்களுக்கு அா்ப்பணிப்புடன் உள்ளது என்றாா் அமித் ஷா.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com