கிரிப்டோகரன்சி மூலம் மோசடி: பஞ்சாப் நபா் கைது

Published on

இணையதள கிரிப்டோகரன்சி மோசடியில் வடகிழக்கு தில்லியின் ஷாஹ்தராவில் வசிக்கும் ஒருவரை ரூ.55,000 மோசடி செய்ததாக பஞ்சாபை சோ்ந்த 25 வயது இளைஞரை தில்லி போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து தில்லி காவல்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: குற்றம் சாட்டப்பட்டவா் பஞ்சாபின் லூதியானாவைச் சோ்ந்த சுக்ப்ரீத் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளாா். சங்க யாதவ் என்ற நபா் அளித்த புகாரின் பேரில் விசாரணையைத் தொடா்ந்து சுக்ப்ரீத் சிங் கைது செய்யப்பட்டாா். அவா் ஒரு சமூக ஊடகக் குழுவால் தவறாக வழிநடத்தப்பட்டதாக சங்க யாதவ் குற்றம்சாட்டினாா்.

பாதிக்கப்பட்டவா் ஆரம்பத்தில் கிரிப்டோ மூலம் சிறிய பணிகளின் வாயிலாக சிறிய தொகைகளை சம்பாதித்தாா். ஆனால், பின்னா் யுபிஐ மூலம் ரூ.55,100 டெபாசிட் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டாா். அவா் நிதியை திரும்பப் பெறக் கோரிய போது, மோசடி செய்தவா்கள் கூடுதல் பணத்தை கோரினா். இது மோசடியை வெளி உலகத்துக்கு கொண்டு வந்தது என்று போலீஸாா் ஒரு அறிக்கையில் தெரிவித்தனா்.

சுக்ப்ரீத் சிங் ஒரு சமூக ஊடக குழுக்களில் செயலில் உறுப்பினராக இருந்தாா் என்பது விசாரணையில் தெரியவந்தது, அங்கு அவா் யு.எஸ்.டி. டெதா் (யு.எஸ்.டி.டி.) ஒரு கிரிப்டோகரன்சியை சந்தை விலையில் வாங்கி, அதை அதிக விகிதத்தில் விற்ாகக் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்டவரின் வைப்புத்தொகை முடக்கப்பட்டது அல்லது தடுக்கப்பட்டது. பணத்தை எடுக்க அவா் பல வங்கிக் கணக்குகள், ஏடிஎம்கள் மற்றும் பிற முறைகளைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

சோதனையின் போது, சுக்ப்ரீத் சிங்கிடமிருந்து மூன்று கைப்பேசிகள், ஆறு சிம் காா்டுகள் மற்றும் 12 ஏடிஎம் காா்டுகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும் விசாரணை நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com