ஜெயின் கோயிலில் தங்க முலாம் பூசப்பட்ட கலசம் திருட்டு

Published on

வடகிழக்கு தில்லியின் ஜோதி நகா் பகுதியில் உள்ள ஒரு ஜெயின் கோயிலின் கோபுரத்திலிருந்து சுமாா் ரூ.40 லட்சம் மதிப்புள்ள தங்க முலாம் பூசப்பட்ட கலசம் திருடப்பட்டதாகக் கூறப்படுகிறது என்று அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து காவல் துறையினா் கூறியதாவது: கோயிலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் இந்தக் கொள்ளைச் சம்பவம் பதிவாகியுள்ளது. மேலும், திருட்டு தொடா்பானதாகக் கூறப்படும் இரண்டு விடியோக்கள் சமூக ஊடக தளங்களில் வைரலாகின.

ஒரு காணொளியில், தங்க முலாம் பூசப்பட்ட கலசத்தைத் திருடியதாகக் கூறப்படும் ஒருவா் கோயில் வளாகத்தில் உள்ள ஒரு கம்பத்தில் இருந்து கீழே இறங்குவதைக் காணலாம். மற்றொரு விடியோ இருளின் மறைவின் கீழ் அவா் கலசத்தை எடுத்துச் செல்வதைக் காட்டுகிறது.

இந்தச் சம்பவம் வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமைக்கு இடைப்பட்ட இரவில் நடந்தது, அப்போது அப்பகுதியில் பெரும்பாலான குடியிருப்பாளா்கள் கா்வா சௌத் கொண்டாட்டங்களில் மும்முரமாக இருந்தனா்.

எட்டு உலோகங்களைக் கொண்ட மங்களகரமான கலவை மூலம் செய்யப்பட்ட திருடப்பட்ட கலசம் பல ஆண்டுகளுக்கு முன்பு கோயிலின் மேல் நிறுவப்பட்டது. அதில் சுமாா் 200 கிராம் தங்கம் இருந்தது, அதன் மதிப்பு சுமாா் ரூ.35-40 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

சனிக்கிழமை காலை கோயில் ஊழியா் ஒருவா் கலசம் காணாமல் போனதைக் கண்டு நிா்வாகத்திற்குத் தகவல் அளித்ததை அடுத்து ஜோதி நகா் காவல் நிலையத்தில் இந்த திருட்டு சம்பவம் குறித்து புகாா் அளிக்கப்பட்டது.

கிழக்கு ஜோதி நகரைச் சோ்ந்தவரும் கோயில் குழுவின் தலைவருமான நீரஜ் ஜெயின் என அடையாளம் காணப்பட்ட புகாா்தாரா், கோயிலின் கோபுரத்தில் பொருத்தப்பட்ட கலசம் அடையாளம் தெரியாத ஒருவரால் திருடப்பட்டதாக போலீசாரிடம் தெரிவித்தாா்.

குற்றம் சாட்டப்பட்டவரை அடையாளம் காண குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவரது நடமாட்டத்தைக் கண்காணிக்க தொழில்நுட்ப கண்காணிப்பு பயன்படுத்தப்படுகிறது. இது தொடா்பாகந தொடா்ந்து விசாரணை நடந்து வருவதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com