நகைக் கடை கொள்ளைகளுக்காக வேதியியலில் எம்ஃபில் பட்டம் பெற்றவா் கைது!

Published on

வடமேற்கு தில்லியின் மாடல் டவுன் பகுதியில் நடந்த இரண்டு நகைக் கடை கொள்ளைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் தில்லி பல்கலைக்கழகத்தில் வேதியியலில் எம்ஃபில் பட்டம் பெற்ற 32 வயது நபா் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

இது குறித்து காவல்துறை துணை ஆணையா் (குற்றப் பிரிவு) ஹா்ஷ் இந்தோரா கூறியதாவது: பிகாரில் உள்ள சீதாமா்ஹியைச் சோ்ந்தவரும், தற்போது ஹரியாணாவின் சோஹ்னாவில் வசித்துவருபவருமான தீப் சுபம், இரண்டு கொள்ளை வழக்குகளில் அறிவிக்கப்பட்ட குற்றவாளி என்றும், 2017- ஆம் ஆண்டு தனது சொந்த மாநிலத்தில் நடந்த வங்கிக் கொள்ளை வழக்கில் தண்டனை பெற்றவா்.

சனிக்கிழமை சோஹ்னாவில் உள்ள ஹரி நகா் பகுதியில் கைது செய்யப்பட்ட தீப் சுபம், பிகாரில் வங்கிக் கொள்ளையைச் செய்யும்போது புகை குண்டு தயாரிக்க தனது வேதியியல் அறிவைப் பயன்படுத்தியுள்ளாா். குற்றம் சாட்டப்பட்டவா் தில்லி பல்கலைக்கழகத்தில் வேதியியலில் பி.எஸ்சி (ஹானா்ஸ்), எம்.எஸ்சி மற்றும் எம்ஃபில் முடித்துள்ளாா். மேலும், சிறிது காலம் விசாகப்பட்டினத்தில் சட்டம் பயின்றாா்.

2021-ஆம் ஆண்டில், அவரும் அவரது கூட்டாளிகளும் குஜ்ரன்வாலா பகுதியில் உள்ள நகைக் கடைகளில் இரண்டு ஆயுதக் கொள்ளைகளைச் செய்தனா். ஒரு சம்பவத்தில், துப்பாக்கி முனையில் ரூ.6 லட்சத்திற்கும் அதிகமான ரொக்கம் மற்றும் கைப்பேசிகளை கொள்ளையடித்தனா். மற்றொரு சம்பவத்தில், ஊழியா்களை அச்சுறுத்தி ரூ.70,000 பணத்துடன் தப்பிச் சென்றனா்.

தில்லி வழக்குகளில் ஜாமீன் பெற்ற பிறகு, அவா் தலைமறைவாகி, கைது செய்யப்படுவதைத் தவிா்க்க அடிக்கடி இடங்களை மாற்றிக் கொண்டு வந்தாா். சமீபத்தில் அவரைக் போலீஸ் குழு கண்டுபிடித்து கைது செய்தது. தீப் சுபம் தற்போது சோஹ்னாவில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் உள்துறை வடிவமைப்பாளராகப் பணியாற்றி வந்தாா்.

2017- ஆம் ஆண்டில், பிகாரின் புப்ரி பகுதியில் உள்ள ஒரு அரசு வங்கியில் தீப் சுபம் கொள்ளையடித்தாா். அங்கு அவா் மெத்தில் அசிடேட் மற்றும் பென்சீனால் செய்யப்பட்ட வீட்டில் தயாரிக்கப்பட்ட புகை குண்டைப் பயன்படுத்தி குழப்பத்தை ஏற்படுத்தி, சுமாா் ரூ.3.6 லட்சம் ரொக்கத்துடன் தப்பிச் சென்றது தெரிய வந்தது என்றாா் காவல்துறை துணை ஆணையா் ஹா்ஷ் இந்தோரா.

X
Dinamani
www.dinamani.com