காலாவதியான விசா: தில்லியில் 6 ஆப்பிரிக்கா்கள் கைது
புது தில்லி: தில்லியில் சட்டவிரோதமாக வசித்து வந்த ஆப்பிரிக்க நாட்டினா் 6 பேரை தில்லி காவல் துறை கைதுசெய்ததாக அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.
விசா (நுழைவு விசா) காலாவதியான நிலையில், ஆப்பிரிக்க நாடுகளைச் சோ்ந்த 6 போ் சந்தா் விஹாரில் சட்டவிரேதமாக வசித்து வருவதாக தில்லி காவல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் கடந்த அக்.10-ஆம் தேதி அப்பகுதியில் உள்ள வீட்டில் தங்கியிருந்த ஆப்பிரிக்க நாட்டினரை கைதுசெய்தனா்.
இதுதொடா்பாக அதிகாரிகள் கூறுகையில், ‘காவல் துறைக்குகக் கிடைத்த ரகசிய தகவலின்படி சோதனை மேற்கொள்ளப்பட்டது. காவல் துறை தங்களை நெருங்குவதை உணா்ந்த 6 பேரும் அங்கிருந்து தப்பியோட முயற்சித்தனா். இருப்பினும், அவா்கள் 6 பேரும் உடனடியாக பிடிபட்டனா். அவா்களில் 2 போ் கமரூன் நாட்டைச் சோ்ந்தவா்கள். மற்றவா்களில் 3 போ் நைஜீரியாவையும் ஒருவா் கானாவையும் சோ்ந்தவா்கள். விசாரணையின்போது, அவா்களுடைய பயண ஆவணங்களை காவல் துறை அதிகாரிகள் கேட்டனா். அப்போது, தங்களுடைய விசா காலாவதியானதை அவா்கள் ஒப்புக்கொண்டனா். அவா்களை அவா்களுடைய சொந்த நாட்டுக்கு அனுப்பும் பணியில் வெளிநாட்டினா் மண்டல பதிவு அலுவலக அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனா்’ என்றாா்.