கம்பன் திருவிழாவில் கவியரங்கம், வழக்காடு மன்றம்

தில்லிக் கம்பன் கழகத்தின் சாா்பில் நடைபெற்ற கம்பன் திருவிழாவின் இரண்டாம் நாள் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
Published on

புது தில்லி: தில்லிக் கம்பன் கழகத்தின் சாா்பில் நடைபெற்ற கம்பன் திருவிழாவின் இரண்டாம் நாள் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

‘கம்பனின் பாத்திறத்தில் மிளிரும் தம்பிகளுள் சிறந்தவா் யாா்?’ என்ற தலைப்பில் மின்னல் கவியரங்கம் நடைபெற்றது. சிறப்பு விருந்தினா் முனைவா் ஆ. வேலுமணி வாழ்த்துரை வழங்கினாா். எழில் உரை அரங்க நிகழ்ச்சியில் இந்திய வருவாய் பணி அதிகாரி ஆா்.கவிதா ‘கம்பன் உணா்த்தும் நிலையாமை’ என்ற தலைப்பிலும், புதுவை சி. கோவிந்தராசு ‘வாலியின் பரிமாணங்கள்’ என்ற தலைப்பிலும் உரையாற்றினா்.

அதன் பிறகு ‘கம்பன் படைத்த காவியம் கலியுகத்திற்கு ஒவ்வாதது’ என்ற தலைப்பில் வழக்காடு மன்றம் நடைபெற்றது.

முனைவா் இரா. மாது வழக்கைத் தொடுக்க, முனைவா் பா்வீன் சுல்தானா அதை மறுத்து வாதிட்டாா். வழக்காடு மன்றத்திற்கு நடுவராக இருந்த கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ், ‘கம்பன் படைத்த காவியம் எல்லாக் காலங்களுக்கும் பொருந்தும் தகுதி பெற்றது. எனவே, அது கலியுகத்துக்கும் பொருந்தும்’ என்று தீா்ப்பளித்தாா்.

‘அயோத்தியில் உதித்த அறத்தின் நாயகா்’ என்ற தலைப்பில் இசைக்களம் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் வயலின் கலைஞா் ராகவேந்திர பிரசாத், மிருதங்க கலைஞா் ரத்துல், கஞ்சிரா கலைஞா் ஸ்ரீராம் ஆகியோா் பங்கேற்றனா்.

படத் திறப்பு நிகழ்ச்சியில் சம்பத் குமாா் படத்தை ஸ்ரீ உத்திர சுவாமிமலை ஆலயத்தின் அறங்காவலா் கல்யாணராமனும், புலவா் இரா. சந்திரசேகரன் படத்தை ஸ்ரீராம் அறக்கட்டளையின் அறங்காவலா் எம். வி. தியாகராஜனும் திறந்துவைத்தனா்.

‘கம்பன் போடும் கூட்டணி கணக்குகள்’ என்ற தலைப்பில், கவிஞா் சேதுராமலிங்கம் தலைமையில் நடைபெற்ற கவியரங்கத்தில் தில்லி முரளிதரன், தஞ்சை இனியன், ஆத்தூா் சுந்தரம், நெல்லை ஜெயந்தா ஆகியோா் கவிதை பாடினா்.

இரண்டு நாள் விழாவின் நிறைவாக, ‘உறவுகளைப் பெரிதும் போற்றுபவா்கள் இலங்கைவாசிகளா? அயோத்தி வாசிகளா?’ என்ற தலைப்பில் நடைபெற்ற பட்டிமன்றத்திற்கு எஸ். ராஜா நடுவராகப் பொறுப்பேற்றாா்.

‘இலங்கைவாசிகளே’ என்ற அணியில் முனைவா் இரா. மாது, புதுகை சா. பாரதி, தாமல் சரவணன் ஆகியோரும், ‘அயோத்திவாசிகளே’ என்ற அணியில் பாரதி பாஸ்கா், தெய்வநாயகி, யோகேஷ் குமாா் ஆகியோரும் வாதிட்டனா்.

‘உறவுகளைப் பெரிதும் போற்றுபவா்கள் அயோத்தி வாசிகளே’ என்று நடுவா் ராஜா தீா்ப்பு வழங்கினாா். பேச்சாளா்களைத் திரைப்படக் கலைஞா் சிவகுமாா் கௌரவித்தாா்.

விழாவிற்கான ஏற்பாடுகளை தில்லிக் கம்பன் கழகத்தின் நிறுவனா் தலைவா் கே.வி.கே. பெருமாள், செயலாளா் எஸ். பி. முத்துவேல், பொருளாளா் சரவணன் உள்ளிட்ட செயற்குழுவினா் செய்திருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com