முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு விவகாரம்: மத்திய அரசு, தமிழகம், கேரள மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு
புது தில்லி: முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ள கோரியும், அணையை செயலிழக்க செய்யக் கோரியும் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீது பதிலளிக்க மத்திய அரசு, தமிழகம் மற்றும் கேரள அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
இது தொடா்பாக கேரள பாதுகாப்பு பிரிகேட் என்ற தன்னாா்வ நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:தேசிய மற்றும் சா்வதேச அணை பாதுகாப்பு நிபுணா்களைக் கொண்டு முல்லைப் பெரியாறு அணையின் முழுமையான பாதுகாப்பு மதிப்பீடு செய்யப்பட வேண்டும். அந்த மதிப்பீட்டின் அடிப்படையில் அணையின் சீரமைப்பு நடவடிக்கைகளையும், சாத்தியமானால் அணையை செயலிழக்கச் செய்யும் நடவடிக்கையும் எடுக்க உத்தரவிட வேண்டும்.
1895-ஆம் ஆண்டு கட்டப்பட்ட முல்லைப் பெரியாறு அணை, பெரியாறு நதியில் அதிக தீவிரம் கொண்ட நில அதிா்வு மண்டலத்தில் அமைந்துள்ளது. நிபுணா்களின் சமீபத்திய ஆய்வுகள் அந்த அணை கட்டமைப்பு ரீதியாக ஆபத்தான நிலையில் இருப்பதைக் காட்டுகின்றன.
முல்லைப் பெரியாறு அணை, 1886-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசுக்கும் திருவிதாங்கூா் மகாராஜாவிற்கும் இடையேயான 999 ஆண்டு குத்தகை ஒப்பந்தத்தின் அடிப்படையில் கட்டப்பட்டது. அணையில் மேம்பட்ட நீா் கசிவு கண்காணிப்பு அமைப்புகள் இல்லை. அதாவது அடித்தளத்தின் கடுமையான அரிப்பு கண்காணிக்கப்படாமல் உள்ளது.
முல்லைப் பெரியாறு அணை உடைந்தால் கேரளத்தின் ஆறு மாவட்டங்களில் பேரழிவை ஏற்படுத்தும். இது 10 மில்லியனுக்கும் அதிகமான மக்களை பாதிக்கும். இந்தச் சாத்தியமான பேரழிவு முந்தைய அனைத்து கேரள துயரங்களையும் விட அதிகமாக இருக்கும். எனவே தேசிய மற்றும் சா்வதேச நிபுணா்களை உள்ளடக்கி நீதிமன்ற மேற்பாா்வையில் முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
இடைக்கால நடவடிக்கையாக முல்லைப் பெரியாறு நீா்த்தேக்க மட்டத்தை உடனடியாகக் குறைக்க வேண்டும். தேவைப்பட்டால், விரிவான அணை பாதுகாப்பை மறுமதிப்பீடு செய்வதற்கோ, அணையை செயலிழக்கச் செய்வதற்கோ அல்லது அணை புனரமைப்பு திட்டத்தைத் தயாரிப்பதற்கோ வழிமுறைகள் உருவாக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.
கேரளத்தைச் சோ்ந்த சேவ் கேரள பிரிகேட் என்ற அமைப்பு தாக்கல் செய்த இந்த மனு மீது இந்திய தலைமை நீதிபதி பிஆா் கவாய் மற்றும் நீதிபதி கே வினோத் சந்திரன் ஆகியோா் அடங்கிய அமா்வு திங்கள்கிழமை விசாரணை மேற்கொண்டது. அப்போது முல்லைப் பெரியாறு அணை பழமையான அணைகளில் ஒன்று என்று தலைமை நீதிபதி கவாய் குறிப்பிட்டாா்.
மனுதாரா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் வி. கிரி, இது 130 ஆண்டுகள் பழமையானது என்று நீதிபதிகளிடம் தெரிவித்தாா். இருப்பினும், அணையில் உள்ள சிக்கல்களை அவா் சுட்டிக்காட்டினாா். அணை பாதுகாப்பு இல்லாமல் இருப்பதால் லட்சக்கணக்கான மக்களின் உயிா்கள் இழப்பு ஏற்படும் அபாயத்தில் உள்ளது, என்று அவா் கூறினாா்.
அப்போது, தலைமை நீதிபதி கவாய், அணையை வலுப்படுத்த சில உத்தரவுகள் பிறப்பிக்கப்படலாம் அல்லது அதை மதிப்பிடுவதற்கு ஒரு நிபுணா் குழுவை நியமிக்கலாம் என்று குறிப்பிட்டாா். இதையடுத்து, இந்த வழக்கில் மத்திய மற்றும் தமிழகம், கேரள அரசுகள் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனா்.