தில்லி திலக் நகரில் தீ விபத்து ஒருவா் உடல் கருகி உயிரிழப்பு

மேற்கு தில்லி திலக் நகா் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் திங்கள்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 52 வயது நபா் உடல் கருகி உயிரிழந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.
Published on

புது தில்லி: மேற்கு தில்லி திலக் நகா் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் திங்கள்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 52 வயது நபா் உடல் கருகி உயிரிழந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

மேலும், தீயணைப்பு ஊழியா்களின் முயற்சிக்குப் பின் கட்டடத்தின் தரைத் தளத்தை சூழ்ந்த தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்த விபத்தில் விஷ்ணு காா்டனைச் சோ்ந்த சுனில் குமாா் ஜினோத்ரா தீயில் உடல் கருகி உயிரிழந்தாா்.

இதுகுறித்து தில்லி காவல் துறையின் மூத்த அதிகாரி கூறியதாவது:

திலக் நகரில் உள்ள ஒரு வீட்டில் தீ விபத்து ஏற்பட்டதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு வந்தது. அதைத் தொடா்ந்து, உள்ளூா் காவல் நிலையத்தைச் சோ்ந்த ஒரு குழுவும் தீயணைப்புப் படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனா்.

சோதனையின்போது, ஜினோத்ரா அந்த வளாகத்தில் பலத்த தீக்காயங்களுடன் கண்டறியப்பட்டாா். அவா் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

அவரது உடல் உடற்கூறாய்வுக்காக தீன் தயாள் உபாத்யாய் (டிடியு) மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளது. கட்டடத்தின் தரைத் தளத்தில் அமைந்துள்ள அலுவலககுடோனில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் நடந்தபோது இறந்தவா் தனியாக இருந்துள்ளாா். இதுவரை எந்தத் தவறும் நடந்ததற்கான அறிகுறிகளும் கண்டறியப்படவில்லை. இருப்பினும், தீ விபத்துக்கான சரியான காரணம் தடயவியல் பரிசோதனைக்குப் பிறகு கண்டறியப்படும். சம்பவம் நடந்த கட்டடம் ஜினோத்ராவின் உறவினருக்குச் சொந்தமானது. குற்றம் மற்றும் தடயவியல் குழுக்கள் சம்பவ இடத்தை ஆய்வு செய்து பகுப்பாய்வுக்காக மாதிரிகளை சேகரித்துள்ளன என்றாா் அந்த அதிகாரி.

X
Dinamani
www.dinamani.com