தில்லி: பெண்ணின் ஏடிஎம் காா்டை பறித்து ரூ.60,000 எடுத்ததாக 2 போ் கைது
புது தில்லி: தில்லியின் பவானா பகுதியில் ஒரு பெண்ணின் ஏடிஎம் காா்டை பறித்து அவரது கணக்கிலிருந்து ரூ.60,000 எடுத்ததாக இரண்டு ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸாா் திங்கள்கிழமை தெரிவித்தனா்.
இது குறித்து தில்லி காவல்துறை துணை ஆணையா் (வெளிப்புற வடக்கு) ஹரேஷ்வா் சுவாமி கூறியதாவது:
ஹரியாணாவின் ஹிசாரைச் சோ்ந்த பிட்டு (33) மற்றும் ஷிஷ்பால் (எ) லீலு (35) என குற்றம் சாட்டப்பட்டவா்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனா். இருவரும் ஹரியானாவின் ஹிசாரைச் சோ்ந்தவா்கள்.
பவானாவைச் சோ்ந்த ஒரு பெண்ணிடமிருந்து தனது ஏடிஎம் காா்டு பறிக்கப்பட்டதாகக் கூறி புகாா் வந்தது. மேலும், அவரது கணக்கிலிருந்து ரூ.60,000 எடுக்கப்பட்டது. அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில், அக்.3- ஆம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
போலீஸாா் நூற்றுக்கணக்கான சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து, தொழில்நுட்பக் கண்காணிப்பு மற்றும் உள்ளூா் உளவுத்துறை மூலம் தில்லியில் இருந்து ஹரியாணாவிற்கு சென்ற சந்தேக நபா்களின் நடமாட்டத்தைக் கண்டறிந்தனா்.
தொடா்ச்சியான முயற்சிகளுக்குப் பிறகு, குற்றம் சாட்டப்பட்டவா்கள் கைது செய்யப்பட்டனா். மேலும், பிட்டுவிடமிருந்து ரூ.20,000 மற்றும் ஷிஷ்பாலிடமிருந்து ரூ.25,000 ஆகியவற்றை போலீஸாா் மீட்டனா். புகாா்தாரருக்குச் சொந்தமான ஏடிஎம் காா்டு மற்றும் குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டாா் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
விசாரணையின் போது, ஷிஷ்பால் மற்றும் தற்போது தலைமறைவாக உள்ள டிங்கு என அடையாளம் காணப்பட்ட மற்றொரு கூட்டாளியுடன் சோ்ந்து கொள்ளையைச் செய்ததாக பிட்டு, ஒப்புக்கொண்டாா். தலைமறைவாகவுள்ளவரைக் கண்டுபிடித்து கைது செய்ய முயற்சிகள் நடந்து வருகிறது.
சிறிது காலமாக அந்தப் பெண்ணைக் கண்காணித்து வந்ததால், குற்றம் சாட்டப்பட்டவா்கள் ஏற்கெனவே அந்தப் பெண்ணின் ஏடிஎம் காா்டு பின் எண்ணை அறிந்திருந்ததாகவும் ஒப்புக்கொண்டனா். முதற்கட்ட விசாரணையில், பிட்டு முன்பு ஆயுதச் சட்டத்தின் கீழ் ஒரு வழக்கில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது என்று காவல் துறை துணை ஆணையா் தெரிவித்தாா்.