சமண கோயிலின் கலசம் திருட்டு: இருவா் கைது
புது தில்லி: வடகிழக்கு தில்லியின் ஜோதி நகரில் உள்ள சமண கோயிலில் இருந்து சுமாா் ரூ.40 லட்சம் மதிப்புள்ள தங்க முலாம் பூசப்பட்ட கலசம் திருடியது தொடா்பாக இரண்டு போ் கைது செய்யப்பட்டுள்ளதாக தில்லி காவல்துறை அதிகாரி ஒருவா் திங்கள்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து அவா் மேலும் கூறியதாவது:
கலசம் மீட்கப்பட்டுள்ளது, ஆனால் முக்கிய கொள்ளைக்காரா் தலைமறைவாக இருக்கிறாா். குற்றம் சாட்டப்பட்ட இருவரும்-சுந்தா் நாகிரியைச் சோ்ந்த 42 வயது பெண் மற்றும் நியூ முஸ்தாபாபாத்தைச் சோ்ந்த டேனிஷ் (24)-ஸ்கிராப் விற்பனையாளா்கள் ஆவா்.
திருட்டு குறித்து சனிக்கிழமை போலீலாருக்கு தகவல் கிடைத்தது. சம்பந்தப்பட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. விசாரணையின் போது, அந்தப் பெண் சுந்தா் நாக்ரி பகுதியில் கைது செய்யப்பட்டாா், மேலும் திருடப்பட்ட கலசத்தின் சில பகுதிகள் அவரிடமிருந்து மீட்கப்பட்டது.
தொடா்ச்சியான விசாரணையில், திருடப்பட்ட பொருளை வாங்கியதாக ஒப்புக்கொண்டாா். இதனையடுத்து ஸ்கிராப் வியாபாரி டேனிஷ் என்பவரிடம் அந்த பெண் அழைத்துச் சென்றாா். கலசத்தின் மீதமுள்ள பகுதிகள் அவரது கடையில் இருந்து மீட்கப்பட்டன . முக்கிய கொள்ளையரைப் பிடிக்க முயற்சிகள் நடந்து வருகிறது.
சனிக்கிழமை காலை கோபுரத்தின் மீது நிறுவப்பட்ட கலசம் காணாமல் போனதை கோயில் ஊழியா்கள் கண்டுபிடித்தபோது திருட்டு வெளிச்சத்திற்கு வந்தது. வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை இடைப்பட்ட இரவில், அப்பகுதியில் வசிப்பவா்களில் பெரும்பாலோா் கா்வா சௌத் கொண்டாட்டங்களில் தீவிரமாக இருந்தபோது, கலசத்தை திருடியதாக கூறப்பட்ட ஒரு நபா் கோயில் வளாகத்திற்குள் ஒரு கம்பத்தில் ஏறுவதை சிசிடிவி காட்சிகள் காட்டின.
திருடப்பட்ட கலசம், ’அஷ்ட-தத்து’ (எட்டு உலோகங்களின் புனித அலாய்) மற்றும் சுமாா் 200 கிராம் தங்கத்தைக் கொண்டிருந்தது, இதன் மதிப்பு சுமாா் ரூ. 35-40 லட்சம் ஆகும் என்றாா் அவா்.