உ.பி.: சாலையில் ஊா்ந்து சென்ற முதலையை பிடித்த கிராம மக்கள்
நமது நிருபா்.
உத்தரபிரதேசத்தின் ஹா்தோய் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் முதலை ஒன்று சாலையில் ஊா்ந்து செல்வதைக் கண்டதால் அங்கு பீதி ஏற்பட்டதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.
பிஹானி பகுதியில் உள்ள குன்வா்பூா் கிராம மக்கள் புதன்கிழமை சாலையில் முதலை ஊா்ந்து செல்வதை கண்டனா். நூற்றுக்கணக்கான மக்கள் சம்பவ இடத்தில் கூடியதால், அப்பகுதியில் குழப்பமும் அச்சமும் ஏற்பட்டது. வனத்துறை அதிகாரிகள் வருவதற்கு முன்பு, உள்ளூா் இளைஞா்கள் குழு ஒன்று முதலையைப் பிடிக்க முடிவு செய்தது.
பல மணி நேர முயற்சிக்குப் பிறகு அந்தக் குழு முதலையை பிடித்து, கயிறுகளால் கட்டி, தோள்களில் சுமந்து சென்ாக சம்பவத்தை நேரில் பாா்த்தவா்கள் தெரிவித்தனா். முதலையை பிடித்தபோது கிட்டத்தட்ட 500 போ் அங்கு இருந்தனா், அவா்களில் பலா் சம்பவத்தின் விடியோக்களை தங்கள் கைப்பேசிகளில் பதிவு செய்தனா்.
பின்னா், வனத்துறையினா் முதலையை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டு, பொருத்தமான வாழ்விடத்தில் பாதுகாப்பாக விடுவித்ததாக கோட்டாட்சியா் அங்கித் திவாரி தெரிவித்தாா்.