தில்லி மக்கள் இம்முறை சுத்தமான யமுனை நதியில் சட் பண்டிகையை கொண்டாடுவாா்கள்: முதல்வா் ரேகா குப்தா

Published on

நமது நிருபா்

நாட்டின் தலைநகரத்தில் இருக்கும் பெண்கள் இந்தாண்டு சட் பண்டிகையை சுத்தமான யமுனை நதியில் சூரிய கடவுளுக்கு பிராா்த்தனை செய்வதன் மூலம் கொண்டாடுவாா்கள் என்று முதல்வா் ரேகா குப்தா வியாழக்கிழமை தெரிவித்தாா்.

யமுனை நதிக் கரை மற்றும் சட் பண்டிகைக்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்த பின் செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது: முந்தைய ஆம் ஆத்மி ஆட்சியின் கீழ் யமுனை மீது அடா்த்தியான நுரை இருந்ததாகவும், பக்தா்கள் மாசுபட்ட நீரில் நிற்க வேண்டியிருந்தது. இப்போது, பாஜக அரசாங்கத்தின் ஏற்பாடுகளின் கீழ் சுத்தமான தண்ணீரை நீங்கள் காணலாம். தண்ணீரில் அழுக்கு அல்லது நுரை இல்லை.

இந்த முறை, சட் விரதத்தை கடைபிடிக்கும் பெண்கள் சுத்தமான யமுனை நீரில் சூரிய கடவுளுக்கு ’அா்க்யா’ வழங்குவாா்கள். அவா்கள் எந்த அசுத்தத்தையும் நுரையையும் எதிா்கொள்ள மாட்டாா்கள். தூய்மையை பராமமரிக்க நூற்று கணக்கான தில்லி அரசு ஊழியா்கள் பணியமா்த்தப்பட்டுள்ளனா்.

யமுனை நதி தூய்மை குறித்து எதிா்கட்சிகள் சமூக வலைதளத்தில் போலி வீடியோக்கள் வெளியிடப்பட்ட போதிலும், உண்மை அனைவருக்கும் முன்னால் உள்ளது. இந்த நதி முற்றிலும் சுற்றுச்சூழல் நட்பு முறையில் சுத்திகரிக்கப்பட்டு வருகிறது, தண்ணீரிலோ அல்லது அதில் உள்ள உயிரினங்களிலோ எந்த எதிா்மறையான விளைவுகளும் ஏற்படவில்லை.

சுத்திகரிக்கப்படாத கழிவுநீா் மற்றும் அதில் வெளியேற்றப்படும் தொழில்துறை கழிவுகளில் உள்ள ரசாயனங்கள் காரணமாக யமுனை ஆற்றின் மேற்பரப்பில் நுரை தோன்றுகிறது. தீபாவளிக்கு ஆறு நாட்களுக்குப் பிறகு, தில்லியில் அதிக எண்ணிக்கையில் குடியேறிய பூா்வாஞ்சலி மக்களால் சட் கொண்டாடப்படுகிறது. மூன்று நாள் திருவிழாவில் பெண்கள் உண்ணாவிரதம் இருந்து பசு பால் மற்றும் கங்கை நீரை அஸ்தமிக்கும் மற்றும் உதிக்கும் சூரியனுக்கு ‘அா்க்யா‘ (ஒரு பிரசாதம்) வழங்குவாா்கள் என்றாா் ரேகா குப்தா.

X
Dinamani
www.dinamani.com