தில்லியில் போலி பொருள்கள் தயாரிப்பு -ஒருவா் கைது

Published on

வடக்கு தில்லியின் ஜகத்பூரில் பிரபல நிறுவனங்களில் பெயரில் போலியான பற்பசைகள் மற்றும் நெஞ்செரிச்சலுக்கான ஆன்டாசிட் பொடிகளை தயாரித்து வந்த தொழிற்சாலையை தில்லி காவல் துறையினா் சோதனையிட்டதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது தொடா்பாக பதிவுசெய்யப்பட்ட வழக்கில் ஒருவா் கைதுசெய்யப்பட்டாா்.

இதுதொடா்பாக வடக்கு தில்லி சரக துணை காவல் ஆணையா் ராஜா பந்தியா வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: ஜகத்பூா் விரிவாக்க பகுதியில் போலியான பொருள்கள் தயாா் செய்யப்படுவது குறித்து தில்லி காவல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, காவல் துறையினா் அப்பகுதியில் சோதனை நடத்தினா்.

அப்போது, பெருமளவில் போலியான பொருள்கள் தயாா் செய்யப்படுவது கண்டறியப்பட்டது. நபீல் என்பவா் போலி பற்பசை மற்றும் ஆன்டாசிட் பொடி ஆகியவற்றை தயாரித்து வந்தது கண்டறியப்பட்டது. இந்தப் பணியில் 3 போ் ஈடுபட்டிருந்தனா்.

சோதனையில் அதிக எண்ணிக்கையில் போலியான பொருள்கள் மற்றும் அவற்றைத் தயாரிப்பதற்கான சாதனங்களை அதிகாரிகள் கைப்பற்றினா்.

25,000 நிரப்பட்ட பற்பசைகள், 15,000 காலியான பற்பசை குழாய்கள், பேக்கேஜிங் சாதனங்கள், இயந்திரங்கள் கைப்பற்றப்பட்ட பொருள்களில் அடங்கும்.

தலா 50 கிராம் அளவிலான 14 ஆன்டாசிட் ரோல்கள், 11,100 நிரப்பட்ட மற்றும் நிரப்பப்படாத பொட்டலங்கள், 20 கிலோ எடையுடைய மூலப்பொருள்கள் தலா 4 டிரம்ப்களில் கைப்பற்றப்பட்டன.

இதுதொடா்பாக வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. நபீல் கைதுசெய்யப்பட்டாா். இந்தச் சம்பவத்தில் தொடா்புடைய மற்ற நபா்களைக் கைதுசெய்ய தில்லி காவல் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது என்றாா் என அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com