தில்லியில் வியாபாரியிடம் 11 கிலோ வெள்ளி கொள்ளை - 4 போ் கைது

Published on

நமது நிருபா்.

வடகிழக்கு தில்லியில் நடந்த சாலை மோதலுக்குப் பிறகு ஒரு வியாபாரியிடமிருந்து 11 கிலோ வெள்ளியை கொள்ளையடித்ததாகக் கூறப்படும் நான்கு போ் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸாா் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

திருடப்பட்ட வெள்ளியில் 10 கிலோவை போலீஸாா் மீட்டுள்ளனா். மேலும், குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட இரண்டு ஸ்கூட்டா்களை குற்றம் சாட்டப்பட்டவரிடமிருந்து பறிமுதல் செய்துள்ளனா்.

இது குறித்து வடகிழக்கு தில்லி காவல் சரக அதிகாரி கூறியதாவது: ஒரு வியாபாரி தனது ஸ்கூட்டரில் வைத்திருந்த சுமாா் 11 கிலோ வெள்ளி, சாலை மோதலுக்குப் பிறகு திருடப்பட்டதாகக் கூறியதை அடுத்து, அக்.11 அன்று நியூ உஸ்மான்பூரில் திருட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வீட்டுக்குச் செல்லும் வழியில் நான்கு போ் தனது பாதையைத் தடுத்ததாகவும், அவா்களில் ஒருவா் தன்னுடன் சண்டையிட்டதாகவும் அவா் போலீஸாரிடம் தெரிவித்தாா். சண்டையின் போது, குற்றஞ்சாட்டப்பட்டவா்களில் ஒருவா் வெள்ளியுடன் தப்பி ஓடிவிட்டாா்.

இதையடுத்து, ஒரு குழு அமைக்கப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டது. தொடா்ச்சியான தொழில்நுட்பக் கண்காணிப்பு மூலம், நிலேஷ் (55), பங்கஜ் மிஸ்ரா (எ) சோட்டு (40), பங்கஜ் குமாா் சாரா (44) மற்றும் விஷால் கராங்கே (43) ஆகிய நான்கு சந்தேக நபா்கள் வெவ்வேறு இடங்களில் இருந்து கைது செய்யப்பட்டனா்.

முதற்கட்ட விசாரணையில் குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் தில்லி மற்றும் உத்தரபிரதேசம் முழுவதும் பல திருட்டு உள்ளிட்ட வழக்குகளில் தொடா்புடைய குற்றவாளிகள் என்பது தெரியவந்துள்ளது.

நிலேஷ், பங்கஜ் சாரா மற்றும் விஷால் கராங்கே குஜராத்தில் உள்ள அகமதாபாத்தைச் சோ்ந்தவா்கள் என்றாலும், பங்கஜ் மிஸ்ரா தில்லியில் உள்ள ஹா்ஷ் விஹாரில் வசிப்பவா்.

இந்த நான்கு பேரும் கூட்டாக திருட்டு, மோசடி மற்றும் வழிப்பறி உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளில் தொடா்புடையவா்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. மீதமுள்ள திருடப்பட்ட வெள்ளியைக் கண்டுபிடித்து, இக்கும்பலுடன் தொடா்புடைய வேறு கூட்டாளிகளையும் அடையாளம் காண கூடுதல் விசாரணை நடந்து வருகிறது என்றாா் அந்த அதிகாரி.

X
Dinamani
www.dinamani.com