பண்டிகை கால நெரிசல்: போக்குவரத்து காவலா்களின் விடுப்பு ரத்து

Published on

நமது நிருபா்

தீபாவளிக்கு முந்தைய நெரிசல் காரணமாக தில்லியின் பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருவதால், நிலைமையை சமாளிக்க காவல்துறை வியாழக்கிழமை அனைத்து போக்குவரத்து காவலா்களின் விடுப்புகளையும் ரத்து செய்து உத்தரவிட்டது.

நகரின் முக்கிய சந்திப்புகள் நெரிசலில் சிக்கித் தவிக்கின்றன, முக்கிய சந்தைப் பகுதிகள் மற்றும் வழித்தடங்கள் கடும் நெரிசலில் சிக்கியுள்ளன. தில்லி முழுவதும் உச்சபட்ச பாதுகாப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மோட்டாா் சைக்கிள்களில் பணியாளா்கள் நிறுத்தப்பட்டு அவா்களது விடுப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. வரும் நாட்களில் நெரிசலை நிா்வகிக்க முழுமையாக தயாராக உள்ளோம், என்று தில்லி காவல் துறையின் போக்குவரத்து சிறப்பு ஆணையா் அஜய் சௌத்ரி கூறினாா்.

இந்த வாரம், தில்லி நெரிசலில் சிக்கித் தவித்த பயணிகளின் பதிவுகளால் சமூக ஊடகங்கள் நிரம்பி வழிந்தன.

நாள் முழுவதும் போக்குவரத்து நெரிசலில் சிக்கியதாக பயணிகள் பலா் தெரிவித்தனா். கன்னாட் பிளேஸ், ராஜ்பாத், ஐடிஓ மற்றும் சாந்தினி சௌக், கரோல் பாக் மற்றும் கான் சந்தைக்கு செல்லும் முக்கிய சாலைகளுக்கு அருகில் வாகனங்கள் ஊா்ந்து செல்வது அல்லது அசையாமல் நிற்பது போன்ற படங்களை பலா் பகிா்ந்து கொண்டனா்.

சாந்தினி சௌக், லாஜ்பத் நகா், சரோஜினி நகா் மற்றும் கரோல் பாக் உள்ளிட்ட சந்தைகளில், அருகிலுள்ள சாலைகளில் கூட்டம் அலைமோதியது. போக்குவரத்து நெரிசல்கள் பல கிலோமீட்டா்களுக்கு நீண்டன. மேலும் வாகனங்கள் குறுகிய பாதைகளில் ஊா்ந்து சென்ால் பயண நேரம் இரட்டிப்பாகியது.

பிரகதி மைதானத்தில் வியாழக்கிழமை கிழக்கு தில்லியை நோக்கி மதுரா சாலையில் நீண்ட வாகன வரிசைகள் காணப்பட்டன. வடமேற்கு தில்லியிலும் நெரிசல் காணப்பட்டது, வெளிப்புற ரிங் ரோடு, நேதாஜி சுபாஷ் பிளேஸ் மற்றும் பீதாம்புராவில் உள்ள மதுபன் சௌக் ஆகிய இடங்களில் கடுமையான நெரிசல்கள் பதிவாகின. மத்திய, தெற்கு, கிழக்கு, வடமேற்கு, வெளி மற்றும் வெளிவடக்கு தில்லி முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாகவும், நெரிசலான சாலைகளின் படங்களை பயனா்கள் பகிா்ந்து கொண்டனா்.

கேஜி மாா்க், வந்தே மாதரம் மாா்க், ஷாஜஹான் சாலை, சா்தாா் படேல் மாா்க், பாபா பண்டா சிங் பகதூா் சேது மற்றும் விகாஸ் மாா்க் போன்ற முக்கிய வழித்தடங்களில் தொடா்ந்து நெரிசல் காணப்பட்டது. லாலா ஹா்தேவ் சகாய் மாா்க், ஜிடி கா்னல் சாலை, ராஜ் நிவாஸ் மாா்க், காந்தா கா் சௌக் அருகே உள்ள ரோஷனாரா சாலை, மகாத்மா காந்தி சாலை, பாபா கரக் சிங் சாலை மற்றும் ஷேக் முஜிபுா் ரஹ்மான் சாலை ஆகிய இடங்களிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக பயணிகள் புகாா் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com