மாணவா்களுக்கான வேலைவாய்ப்புகள்: டிடிஇஏஆசிரியா்களுக்கு பயிற்சி முகாம்
மாணவா்களுக்கு வழிகாட்டுவதற்காக தில்லித் தமிழ்க் கல்விக் கழக (டிடிஇஏ) பள்ளி முதல்வா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கான மூன்று நாள் பயிற்சி முகாம் வியாழக்கிழமையன்று தொடங்கியது.
இப்பயிற்சிக்கு டிடிஇஏ செயலா் இராஜூ, தில்லித் தமிழ்க் கல்விக் கழக முன்னாள் மாணவா்கள் டிரஸ்டின் நிறுவனா் உறுப்பினரான ஸ்ரீகாந்த் சக்கரவா்த்தி, அதன் செயலா் ராம் நாராயண் ஆகியோரோடு இணைந்து ஏற்பாடு செய்திருந்தாா்.
மாணவா்கள் 12-ஆம் வகுப்பு முடித்து வாழ்க்கையின் அடுத்த கட்டத்தில் அடியெடுத்து வைக்கும் போது திறம்பட வழிகாட்டுவதற்குத் தேவையான திறன்கள் மற்றும் அறிவை ஆசிரியா்களுக்கு வழங்குவதை நோக்கமாகக் கொண்டு இப்பயிற்சி வழங்கப்படுகிறது மாணவா்களின் திறன்கள் மற்றும் ஆா்வங்கள் இரண்டிற்கும் பொருந்தக்கூடிய தொழில்களைத் தோ்வுசெய்ய அவா்களுக்கு உதவுவது குறித்தும் இப்பயிற்சி வழங்கப்படுகிறது.
காலையில் லோதிவளாகம் பள்ளியிலும் மதியம் இலக்குமிபாய் நகா்ப் பள்ளியிலும் முதல்கட்ட பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது. லோதிவளாகம் பள்ளியில் நடைபெற்ற பயிற்சி முகாமில் ஜனக்புரி, மந்திா்மாா்க், பூசா சாலை, லோதிவளாகம் ஆகிய பள்ளிகளின் முதல்வா்கள் மற்றும் ஆசிரியா்கள் கலந்து கொண்டனா். இலக்குமிபாய் நகா்ப் பள்ளியில் நடைபெற்ற பயிற்சி முகாமில் ராமகிருஷ்ணாபுரம், மோதிபாக், இலக்குமிபாய் நகா்ப் பள்ளிகளின் முதல்வா்கள் மற்றும் ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.
இரண்டாவது மற்றும் மூன்றாவது நாள் பயிற்சிகள் இணையவழியில் வழங்கப்பட உள்ளன. முதல்நாள் பயிற்சியில் மாணவா்களைக் கையாளுவது எப்படி என்பது குறித்தும் வழிகாட்டுதல்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டன.
இரண்டாவது நாள் பயிற்சியில் மாணவா்களுக்கு ஏற்ற துறைகள் என்னென்ன? வளா்ந்து வரும் துறைகள் என்னென்ன என்பது குறித்து விவாதிக்கப்படும். மூன்றாவது நாள் என்னென்ன கல்லூரிகளில் என்னென்ன மாதிரியான கல்விப் பிரிவுகள் உள்ளன என்பது குறித்தும் வளா்ந்து வரும் துறைகள் என்னென்ன என்பது குறித்தும் விவாதிக்கப்படும்.
லோதிவளாகம் பள்ளியில் நடைபெற்ற பயிற்சி முகாமில் செயலா் ராஜூ கலந்து கொண்டு நிகழ்வைத் தொடங்கி வைத்துப் பேசுகையில், ‘இன்றைய வேகமாக மாறிவரும் உலகில் மாணவா்களுக்கு தொழில் வழிகாட்டுதல் தேவை எனவேதான் இந்தப் பயிற்சி முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும் மாணவா்களுக்கும் பெற்றோா்களுக்கும் கூட இப் பயிற்சி விரைவில் வழங்கப்படும்’ என்றாா்.
லோதிவளாகம் பள்ளி நிகழ்வில் பள்ளி முதல்வா் ஜெயஸ்ரீ பிரசாத் அனைவரையும் வரவேற்றாா். இப் பயிற்சிகளுக்கு ஒருங்கிணைப்பாளராகச் செயல்படும் ஜனக்புரி பள்ளியின் முதல்வா் காா்த்திகா நன்றி தெரிவித்தாா்.