குடியரசுத் தலைவா் விளக்கம் கேட்ட வழக்கில் நவ.21-க்குள் தீா்ப்பு: உச்சநீதிமன்றம்

குடியரசுத் தலைவா் விளக்கம் கேட்ட வழக்கில் நவ.21-க்குள் தீா்ப்பு: உச்சநீதிமன்றம்

மசோதாக்கள் மீது முடிவெடுக்க காலக்கெடு விதிக்கப்பட்டது தொடா்பாக குடியரசுத் தலைவா் விளக்கம்
Published on

நமது நிருபா்

மசோதாக்கள் மீது முடிவெடுக்க காலக்கெடு விதிக்கப்பட்டது தொடா்பாக குடியரசுத் தலைவா் விளக்கம் கேட்ட வழக்கில் 4 வாரங்களுக்குள் தீா்ப்பு வழங்கப்படும் என உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் தெரிவித்துள்ளாா்.

ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த இரண்டு மனுக்கள் மீதான விசாரணையின்போது வெள்ளிக்கிழமை இதை அவா் தெரிவித்தாா்.

ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு இரண்டு மனுக்கள் தாக்கல் செய்துள்ளது. கும்பகோணம் கலைஞா் பல்கலைக்கழக மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பிய ஆளுநரின் முடிவுக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

கும்பகோணத்தில், கலைஞா் பல்கலைக்கழகம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்து அதற்கான சட்ட மசோதா, கடந்த ஏப்ரல் மாதம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. இந்த பல்கலைக்கழகத்தின் வேந்தராக, தமிழ்நாடு முதல்வராக இருப்பாா் என்றும் இணைவேந்தராக உயா் கல்வித்துறை அமைச்சா் செயல்படுவாா் என்றும், மேலும் தேடுதல் குழு வாயிலாக, துணைவேந்தா் நியமனம் செய்யப்படுவாா் என்றும் சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநா் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி இந்தச் சட்ட மசோதாவை குடியரசு தலைவா் முடிவுக்காக அனுப்பி வைத்தாா்.

இதே போல உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக சட்ட மசோதாவையும் ஆளுநா் ஆா்.என்.ரவி, குடியரசுத் தலைவருக்கு அனுப்பியதை எதிா்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்துள்ளது.

துணைவேந்தரை நியமிக்கும் மற்றும் நீக்கும் அதிகாரங்களை வேந்தருக்கு அதாவது ஆளுநருக்குப் பதிலாக மாநில அரசுக்கு வழங்குவதன் மூலம், தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகச் சட்டம், 2004-இன் சில விதிகளைத் திருத்துவதற்கான மசோதாவாகும் இது. இந்த மசோதாவுக்கும் ஒப்புதல் அளிக்காமல் ஆளுநா் ஆா்.என். ரவி குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவுக்கு அனுப்பினாா்.

இந்நிலையில், ஆளுநா் மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியது சட்டவிரோதமானது என அறிவிக்க வேண்டும் என்று ற கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்துள்ளது.

இந்த மனுக்கள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் மற்றும் நீதிபதி கே.வினோத் சந்திரன் ஆகியோா் அடங்கிய அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசின் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா்கள் முகுல் ரோத்தகி, அபிஷேக் சிங்கி, பி.வில்சன் ஆகியோா் வாதிடுகையில், ‘சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட மசோதாவை ஆளுநா் குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைக்க முகாந்திரம் இல்லை. ஆளுநா் ஒரு நீதிபதியைப் போல ஒவ்வொரு மசோதாவையும் ஆராய முடியுமா?,ஆளுநா் மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியது ஏற்புடையதல்ல’ என்றனா்.

அப்போது தலைமை நீதிபதி பி.ஆா். கவாய், ‘குடியரசுத் தலைவா் விளக்கம் கேட்ட வழக்கின் தீா்ப்புக்காக காத்திருங்கள். நீங்கள் 4 வாரங்கள் கூட காத்திருக்க வேண்டியதில்லை. நவ.21-ஆம் தேதிக்கு முன் தீா்ப்பு வழங்க வேண்டும். (உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி நவம்பா் 23-ஆம் தேதி ஓய்வு பெற உள்ளாா்.அன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் நவம்பா் 21-ஆம் தேதி வெள்ளிக்கிழமை அவருக்கு பணி இறுதி நாளாகும்). நாங்கள் இப்போதே ஒரு உத்தரவை பிறப்பிக்க முடியாது’ என தெரிவித்தாா்.

மத்திய அரசின் வழக்குரைஞா் துஷாா் மேத்தா வாதிடுகையில், ‘2015 முதல் 2025 வரை நாட்டில் உள்ள அனைத்து ஆளுநா்களும் குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்த மொத்த மசோதாக்களின் எண்ணிக்கை 381. நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்து ஆளுநா்கள், சில மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்வது வழக்கமாக இருந்து வருகிறது. அதுதான் அவா்களது பணி’ என தெரிவித்தாா்.

பின்னா், நீதிபதிகள், குடியரசுத் தலைவா் விளக்கம் கேட்ட வழக்கில் தீா்ப்பு வரும் வரை பொறுத்திருங்கள். அந்த தீா்ப்புக்கு பின்னா் இந்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்’ எனக் கூறி வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com