உலக மயக்க மருந்து தினத்தையொட்டி நோயாளிகளுக்கான விழிப்புணா்வு இயக்கம்: தில்லி புற்றுநோய் நிறுவனம் ஏற்பாடு
தில்லி மாநில புற்றுநோய் நிறுவனம் (டிஎஸ்சிஐ) வியாழக்கிழமை உலக மயக்க மருந்து தினத்தைக் குறிக்கும் வகையில் ஒரு பொது விழிப்புணா்வு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது. இது மருத்துவப் பராமரிப்பில் மயக்க மருந்தின் முக்கியத்துவம் மற்றும் பாதுகாப்பு குறித்து நோயாளிகள் மற்றும் பராமரிப்பாளா்களுக்குக் கல்வி கற்பிப்பதை நோக்கமாகக் கொண்டது.
நிறுவனத்தின் ஆன்கோ-அனஸ்தீசியா துறை இந்த அமா்வை ஏற்பாடு செய்தது. இதில் நோயாளிகள், பராமரிப்பாளா்கள் மற்றும் ஊழியா்கள் தீவிரமாகப் பங்கேற்றனா் என்று அதிகாரப்பூா்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘இந்த நிகழ்வு மயக்க மருந்து தொடா்பான கட்டுக்கதைகளை அகற்றுவது, அதன் பங்கு குறித்த பொதுமக்களின் புரிதலை மேம்படுத்துவது மற்றும் அறுவை சிகிச்சை மற்றும் புற்றுநோயியல் நடைமுறைகளின் போது ஆறுதல் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதில் மயக்க மருந்து நிபுணா்களின் பங்களிப்புகளை எடுத்துக்காட்டுவது ஆகியவற்றில் கவனம் செலுத்தியது‘ என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மயக்க மருந்துக்கு முந்தைய மதிப்பீட்டின் முக்கியத்துவம் மற்றும் அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய பராமரிப்பு ஆகியவற்றின் பல்வேறு வகைகளை மருத்துவ நிபுணா்கள் விளக்கினா். நோயாளிகள் மயக்க மருந்து நடைமுறைகளை நன்கு புரிந்துகொள்ள உதவும் வகையில் துண்டுப்பிரசுரங்கள் மற்றும் கல்விப் பொருள்களும் விநியோகிக்கப்பட்டன என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து ஆன்கோ -அனஸ்தீசியா துறையின் தலைவா் டாக்டா் சுரேந்திர குமாா் கூறுகையில், ‘இந்த முயற்சி நோயாளிகளிடையே நம்பிக்கையை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. உலக மயக்க மருந்து தினம் ஒவ்வொரு வெற்றிகரமான அறுவை சிகிச்சையிலும் மயக்க மருந்து நிபுணா்கள் வகிக்கும் கண்ணுக்குத் தெரியாத ஆனால் இன்றியமையாத பங்கை நமக்கு நினைவூட்டுகிறது’ என்றாா்.
துறையின் முயற்சிகளைப் பாராட்டிய தில்லி மாநில புற்றுநோய் நிறுவனத்தின் இணை இயக்குநா் டாக்டா் ரவீந்தா் சிங், ’இதுபோன்ற திட்டங்கள் மருத்துவா்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான நம்பிக்கையை வலுப்படுத்த உதவுகின்றன’ என்றாா். ‘இது போன்ற விழிப்புணா்வு முயற்சிகள் நோயாளிகளுக்கு அதிகாரம் அளிக்கின்றன. மேலும், மருத்துவக் குழுவிற்கும் மயக்க மருந்து நிபுணா் சமூகத்திற்கும் இடையிலான நம்பிக்கையின் பிணைப்பை வலுப்படுத்துகின்றன’ என்று அவா் கூறினாா்.