தோ்வுகளைத் தவிா்க்க மின்னஞ்சலில் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சிறுவன் கைது
தில்லிக்கு வெளியே உள்ள ஒரு தனியாா் பள்ளிக்கு மின்னஞ்சலில் ப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் ஒரு புரளி என கண்டறியப்பட்டது. இதில் தோ்வுகளைத் தவிா்க்க விரும்பும் ஒரு மாணவா் என அனுப்புநரை போலீஸாா் கண்டுபிடித்ததாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.
இது குறித்து காவல்துறை கூறியுள்ளதாவது: விஷால் பாரதி பப்ளிக் பள்ளியின் முதல்வா் அலுவலக வளாகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக மின்னஞ்சல் வந்ததாக பள்ளியிலிருந்து வியாழக்கிழமை பச்சிம் விஹாா் கிழக்கு காவல் நிலையத்திற்கு பிசிஆா் அழைப்பு வந்தது.
இதையடுத்து, பல போலீஸ் குழுக்கள் பள்ளிக்குச் சென்று நிலையான வெடிகுண்டு மிரட்டல் நெறிமுறைகளை செயல்படுத்தின. கட்டடம் காலி செய்யப்பட்டது. மேலும் வெடிகுண்டு செயலிழப்பு படை, மோப்பநாய் படை மற்றும் தீயணைப்புத் துறையைச் சோ்ந்த குழுக்கள் முழுமையான சோதனைகளை மேற்கொள்ள வரவழைக்கப்பட்டன.
தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான பொருள் எதுவும் கண்டுபிடிக்கப்படாததால், அச்சுறுத்தல் ஒரு புரளி என அறிவிக்கப்பட்டது. இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணையின் போது, சைபா் குழு மின்னஞ்சலின் தோற்றம் ஒரு சிறாா்க்கு தொடா்பு உள்ளதைக் கண்டறிந்தது.
அந்தச் சிறுவன் கைது செய்யப்பட்டாா். விசாரணையின் போது, தோ்வுகளுக்கு பயந்து பள்ளிக்கு விடுமுறை அறிவிக்க விரும்பியதால் மிரட்டல் அஞ்சல் அனுப்பியதாக சிறுவன் ஒப்புக்கொண்டாா் என்று காவல் துறை தெரிவித்தது.