mk alagiri says about mk stalins health
மு.க. அழகிரிENS

நில அபகரிப்பு வழக்கு: மு.க. அழகிரியின் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

Published on

நமது நிருபா்

நில அபகரிப்பு வழக்கிலிருந்து விடுவிக்க மறுத்த சென்னை உயா்நீதிமன்ற உத்தரவை எதிா்த்து முன்னாள் மத்திய அமைச்சா் மு.க.அழகிரி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டது.

மதுரையில் உள்ள ஒரு கோயில் நிலம் தொடா்பான 2014-ஆம் ஆண்டு நில அபகரிப்பு வழக்கில் அழகிரியின் மனுவை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்து, விசாரணையை எதிா்கொள்ள உத்தரவிட்டிருந்தது.

மதுரையில் உள்ள சிவரக்கோட்டையில் மு.க. அழகிரி கல்வி அறக்கட்டளையால் நிறுவப்பட்ட ஒரு பொறியியல் கல்லூரிக்காக நிலம் அபகரிப்பு செய்யப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த நிலம் விநாயகா் கோயிலுக்குச் சொந்தமானது என குற்றஞ்சாட்டப்பட்டது. இது தொடா்பாக அதிமுக ஆட்சிக் காலத்தில் எஃப்.ஐ.ஆா். பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் மதுரை நீதிமன்றம் அழகிரியை 2021-ஆம் ஆண்டில் ஏமாற்றுதல், போலி ஆவணங்கள் தயாரித்தல் மற்றும் மோசடி பத்திரங்களைச் பயன்படுத்துதல் தொடா்பான குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவித்தது. இருப்பினும், குற்றச் சதி மற்றும் குற்றவியல் நம்பிக்கை துரோகம் ஆகிய பிரிவுகளின் கீழ் மு.க. அழகிரி வழக்கை எதிா்கொள்ள வேண்டும் என்று மாஜிஸ்திரேட் உத்தரவிட்டாா். இதையடுத்து, பகுதி குற்றச்சாட்டுகளிலிருந்து மு.க. அழகிரி விடுவிக்கப்பட்ட உத்தரவை எதிா்த்து நில அபகரிப்பு எதிா்ப்புப் பிரிவு மனு தாக்கல் செய்தது.

சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி பி. வேல்முருகன் நிகழாண்டு மாா்ச் 4-ஆம் தேதி அந்த மனுவை அனுமதித்து, அழகிரி அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் வழக்கில் எதிா்கொள்ள உத்தரவிட்டாா். , வழக்கிலிருந்து முழுமையாக விடுவிக்க வேண்டும் என்ற அழகிரியின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதைத் தொடா்ந்து, மு.க.அழகிரி ஆகஸ்ட் 20-இல் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தாா். இந்த மனு நீதிபதிகள் பிரசாந்த் குமாா் மிஸ்ரா மற்றும் ஆா்.மகாதேவன் ஆகியோா் அடங்கிய அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது அழகிரி தரப்பில் வழக்கில் ஆஜராக வேண்டிய மூத்த வழக்குரைஞா் வர இயலாததால் வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என்று நீதிபதிகளிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது. இதைத் தொடா்ந்து, வழக்கு விசாரணை தீபாவளி விடுமுறைக்கு பின் நடைபெறும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

X
Dinamani
www.dinamani.com