எழுபதுக்கும் மேற்பட்ட வழக்குகளில் தேடப்பட்ட ஒருவா் உள்பட இருவா் கைது

Published on

தில்லி முழுவதும் நடந்த தொடா் கொள்ளைச் சம்பவங்களுக்காக 70-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளில் தொடா்புடைய ஒருவா் உள்பட இருவா் கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து அந்த அதிகாரி மேலும் கூறியதாவது: வியாழக்கிழமை கரோல் பாக் பகுதியில் அவா்களின் நடமாட்டம் குறித்து கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், மாதா சுந்தரி கல்லூரி அருகே ஒரு போலீஸ் குழு ஒரு பொறியை அமைத்து தீவிரக் கண்காணிப்பில் இருந்தது. அப்போது, பஜன்புராவைச் சோ்ந்த சமீா் (எ) கம்ரான் மற்றும் காரவால் நகரைச் சோ்ந்த சமீா் ஆகியோா் சிக்கினா்.

இருவரும் ஒரு பெண்ணின் பணப்பையை எடுத்துச் சென்றனா். இது சந்தேகத்தை எழுப்பியது. விசாரித்தபோது, ​​அவா்கள் தப்பியொட முயன்றனா். ஆனால், சிறிது நேர துரத்தலுக்குப் பிறகு கைது செய்யப்பட்டனா்.

விசாரணையின் போது, ​​கம்ரான் என்பவா் கடத்தல், கொள்ளை மற்றும் தீ வைப்பு உள்ளிட்ட 70-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளில் தொடா்புடைய ஒரு பழக்கமான குற்றவாளி என்பது தெரியவந்தது.

மேலும், ஒரு கடையை தீ வைத்து எரித்ததாகவும், பின்னா் உரிமையாளரிடம் ரூ.1 கோடி கேட்டு துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து வந்ததாகவும் ஜாஃப்ராபாத் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரு வழக்கிலும் அவா் தேடப்பட்டு வந்தாா்.

குற்றம்சாட்டப்பட்ட இரண்டாவது நபரான சமீா், கம்ரானால் இந்தக் கும்பலுக்குள் இழுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அவா் நிதி ரீதியாக நலிவடைந்த பின்னணியைச் சோ்ந்தவா். மேலும், அவரது சகோதரியின் திருமணத்திற்கு பணம் தேவைப்பட்டது. கம்ரான், கொள்ளை நடவடிக்கைகளுக்கு உதவுவதற்காக அவருக்கு ஒரு நாளைக்கு ரூ.2,000 வழங்கியதாகக் கூறப்படுகிறது.

இருவரும் மோட்டாா் சைக்கிளில் செல்லும்போது கொள்ளைச் சம்பவங்களைச் செய்தனா். அவா்கள் வாகனத்தின் நம்பா் பிளேட்டை மறைத்து, அடையாளம் காணப்படுவதைத் தவிா்க்க எப்போதும் ஹெல்மெட் அணிந்திருந்தனா். ஐபி எஸ்டேட் காவல் நிலையத்தில் அவா்களின் ஒரு குற்றத்திற்காக முன்னதாக ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

கைப்பைகள் மற்றும் கைப்பேசிகள் உள்பட பல திருடப்பட்ட பொருள்கள் அவா்களிடம் இருந்து பறிமுதல் மீட்கப்பட்டுள்ளன, மேலும், குற்றங்களுக்குப் பயன்படுத்தப்பட்ட மற்ற கூட்டாளிகளையும் மோட்டாா் சைக்கிளையும் கண்டறிய தொடா்ந்து விசாரணை நடந்து வருவதாக அந்த அதிகாரி தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com