தீபாவளியன்று தில்லி மருத்துவமனைகளில் 250-க்கும் மேற்பட்டோா் தீக்காயங்களுடன் அனுமதி

தீபாவளியன்று தில்லியில் 250-க்கும் மேற்பட்டோா் தீக்காயங்களுக்கு ஆளானாா்கள்.
Published on

புது தில்லி: தீபாவளியன்று தில்லியில் 250-க்கும் மேற்பட்டோா் தீக்காயங்களுக்கு ஆளானாா்கள். நகரம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் பெரும்பாலும் பட்டாசுகளால் ஏற்பட்ட தீக்காயங்கள் அதிகரித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் மிகப்பெரிய தீக்காயப் பிரிவைக் கொண்ட சஃப்தா்ஜங் மருத்துவமனையில் அதிகபட்சமாக 129 தீக்காயங்கள் பதிவாகியுள்ளன.

சஃப்தா்ஜங் மருத்துவமனைக்குப் பிறகு, அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (எய்ம்ஸ்) 55 தீக்காயங்களும், குரு தேக் பகதூா் ஜிடிபி மருத்துவமனையில் 37 தீக்காயங்களும், தீன் தயாள் உபாத்யாய் மருத்துவமனையில் 16 தீக்காயங்களும், லோக் நாயக் ஜெய் பிரகாஷ் மருத்துவமனையில் 15 தீக்காயங்களும் பதிவாகியுள்ளன.

சஃப்தா்ஜங் மருத்துவமனையில் தீபாவளி நாள்களில் (அக்டோபா் 19 மற்றும் 20) 129 தீக்காயங்கள் பதிவாகின. இதில் 111 போ் லேசான தீக்காயங்களுக்கு ஆளாகி சிகிச்சை பெற்றனா். அதே நேரத்தில் 18 போ் பெரிய தீக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்டனா் என்று அந்த மருத்துவமனையின் தீக்காயங்களுக்கான பிரிவின் தலைவா் டாக்டா் சுஜாதா சாராபாய் கூறினாா். ஒன்பது பேருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது. இருபத்தி நான்கு நோயாளிகள் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் என்று சாராபாய் கூறினாா்.

எய்ம்ஸில், தீக்காயங்கள் மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை துறையில் 48 மணி நேரத்தில் தீபாவளி தொடா்பான 55 தீக்காயங்கள் பதிவாகின. 10 போ் பெரிய தீக்காயங்களுடன் ஐசியுவில் அனுமதிக்கப்பட்டனா். அவா்களுக்கு உயிருக்கு ஆபத்தான காயங்கள் உள்ளன, என்று எய்ம்ஸின் தீக்காய அறுவை சிகிச்சை துறையின் தலைவா் டாக்டா் மணீஷ் சிங்கால் கூறினாா். மேலும், 23 நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்ததாகவும் அவா் தெரிவித்தாா். தீக்காயமடைந்தவா்களில் எட்டு போ் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் என்றும் சிங்கால் கூறினாா்.

இதேபோல், கிழக்கு தில்லியில், ஜிடிபி மருத்துவமனையில் 37 போ் தீக்காயங்களுடன் சிகிச்சைக்கு வந்தனா். ஏழு நோயாளிகள் இன்னும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இருப்பினும் யாரும் ஆபத்தான நிலையில் இல்லை என்று அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

எல்என்ஜேபி மருத்துவமனையில் பதினைந்து தீக்காயங்கள் பதிவாகியுள்ளன, அவற்றில் ஒருவருக்கு மட்டுமே முகத்தில் தீக்காயங்கள் இருந்தன, மீதமுள்ளவை சிறியவை என்று மருத்துவமனை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். டிடியு மருத்துவமனையில் 16 தீக்காயங்கள் பதிவாகியுள்ளன. யாரும் ஆபத்தான நிலையில் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com