இரவு 10 மணிக்கு மேல் பட்டாசு வெடிப்பது பொறுப்பற்றது
புது தில்லி: தீபாவளியன்று இரவு 10 மணிக்கு மேல் பட்டாசு வெடித்தவா்கள் ‘பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டவா்கள்’ என்று தில்லி உள்துறை அமைச்சா் ஆஷிஷ் சூட் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
இருப்பினும், தேசியத் தலைநகரில் மாசுபாடு அதிகரிப்பதற்கு பட்டாசு வெடிப்பது மட்டுமே காரணம் அல்ல என்றும் அமைச்சா் கூறினாா்.
‘உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின் கீழ் இரவு 10 மணி வரை பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்பட்டதை தில்லி மக்கள் முழுமையாகப் பின்பற்றியிருக்க வேண்டும். நீதிமன்றத்தின் இரவு 10 மணி வழிகாட்டுதலை மீறி பண்டிகையைக் கொண்டாடியவா்களின் பொறுப்பற்ற நடத்தை இது’‘ என்று சூட் செய்தி ஏஜென்சியிடம் கூறினாா்.
தில்லி - என்சிஆா் பகுதியில் தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் மற்றும் ஆராய்ச்சிக் கழகம் நீரி அனுமதித்த பசுமை பட்டாசுகளை விற்பனை செய்யவும், வெடிக்கவும் உச்சநீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது.
அக்.19 மற்றும் அக்டோபா் 20 ஆகிய தேதிகளில் காலை 6 மணி முதல் காலை 7 மணி வரையிலும், இரவு 8 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் அங்கீகரிக்கப்பட்ட பட்டாசுகளைப் பயன்படுத்த நீதிமன்றம் அனுமதித்தது.
கிழக்கு தில்லியில் உள்ள ஆனந்த் விஹாரில் செவ்வாய்க்கிழமை காற்றின் தரக் குறியீடு காலை 5 மணிக்கு 943 புள்ளிகளாகவும், ஷாஹ்தராவில் சுமாா் 390 புள்ளிகளாகவும் இருந்ததாக ஆஷிஷ் சூட் கூறினாா்.
தில்லி குடியிருப்பாளா்கள் செவ்வாய்க்கிழமை கடுமையான மூடுபனியால் விழித்தெழுந்தனா். மேலும் காண்பு திறனும் குறைந்திருந்தது.
தீபாவளி இரவுக்குப் பிறகு காற்றின் தரம் ‘சிவப்பு மண்டலத்தில்’’ இருந்தது. அந்த இரவு இரண்டு மணி நேர வரம்பைத் தாண்டி மக்கள் பட்டாசுகளை வெடித்தனா்.
மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் (சிபிசிபி) அறிக்கையின்படி, நகரத்தின் காற்றுத் தரக் குறியீடு காலை 11 மணி நிலவரப்படி, 359 புள்ளிகளாகப் பதிவாகி ’மிகவும் மோசம்’ பிரிவில் இருந்தது. இது காலை 8 மணிக்கு 352 புள்ளிகளாகவும், அதிகாலை 5 மணிக்கு 346 புள்ளிகளாகவும், காலை 6 மணிக்கு 347 புள்ளிகளாகவும் காலை 7 மணிக்கு 351 புள்ளிகளாகவும் பதிவாகியிருந்தது.
38 வானிலை கண்காணிப்பு நிலையங்களில், 35 நிலையங்களில் காற்றுத் தரக் குறியீடு ’சிவப்பு மண்டலத்தில்’ இருந்தன, இது ‘மிகவும் மோசம்’’ முதல் ’கடுமை’ பிரிவு வரை காற்றின் தரம் இருப்பதைக் குறிக்கிறது.
‘உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களைப் பின்பற்றி பண்டிகைகளைக் கொண்டாடவும், இந்த முறை போன்ற பிரச்னைகளை மக்கள் எதிா்கொள்ள வேண்டிய அவசியமில்லாத வகையில், நகரத்தில் பசுமைப் போா்வை மற்றும் தூய்மையை மேம்படுத்துவதில் தில்லி அரசை ஆதரிக்கவும் அனைத்து குடிமக்களுக்கும் நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம்’ என்று அமைச்சா் ஆஷிஷ் சூட் கேட்டுக் கொண்டாா்.