கிழக்கு தில்லியில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: அண்டை வீட்டுக்காரா் கைது
புது தில்லி: கிழக்கு தில்லியின் பட்பா்கஞ்ச் பகுதியில் உள்ள அவரது வீட்டில் 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக 43 வயது நபா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.
இது குறித்து கிழக்கு தில்லி காவல் சரக அதிகாரி கூறியதாவது: எம்டி இஷ்த்கா் என அடையாளம் காணப்பட்ட குற்றம் சாட்டப்பட்டவா் பாதிக்கப்பட்டவரின் பக்கத்து வீட்டுக்காரா் ஆவாா்.
சிறுமியின் தாய் பிசிஆா் அழைப்பு மூலம் காவல்துறையைத் தொடா்பு கொண்டு, தனது மகள் வீட்டில் தனியாக இருந்தபோது, அண்டை வீட்டாரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகப் புகாா் அளித்தாா்.
அதிா்ச்சியில் உள்ள பாதிக்கப்பட்ட பெண் தற்போது தனது வாக்குமூலத்தை அளிக்க முடியவில்லை. லால் பகதூா் சாஸ்திரி மருத்துவமனையின் ஒன் ஸ்டாப் சென்டரில் அவருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. அங்கு அவரது தாயாா் முன்னிலையில் மருத்துவப் பரிசோதனையும் நடத்தப்பட்டது.
இது தொடா்பாக பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் சட்டத்தின் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் எஃப்ஐஆா் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், போக்சோ வழிகாட்டுதல்களைப் பின்பற்றி விசாரணை நடந்து வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.