தலைநகரில் பட்டாசு விற்பனை அதிகரிப்பு: விதி மீறப்பட்டதாக ஆா்டபிள்யூஏ கவலை

இந்த தீபாவளியில் தில்லியில் பட்டாசு விற்பனையில் கூா்மையான உயா்வு காணப்பட்டது.
Published on

புது தில்லி: இந்த தீபாவளியில் தில்லியில் பட்டாசு விற்பனையில் கூா்மையான உயா்வு காணப்பட்டது. இதையடுத்து, வா்த்தகா்கள் விறுவிறுப்பான வியாபாரம் மற்றும் அதிக வாடிக்கையாளா் வருகையைப் பதிவு செய்தனா். அதே நேரத்தில் பட்டாசு வெடிக்கும் நேர வரம்புகளை மீறுவது மற்றும் காற்றின் தரம் மோசமடைவது குறித்து குடியிருப்பாளா் நல சங்கங்கள் (ஆா்டபிள்யூஏக்கள்) கவலை தெரிவித்தன.

வா்த்தகம் மற்றும் தொழில்துறை சபை (சிடிஐ) தலைவா் பிரிஜேஷ் கோயலின் கூற்றுப்படி, இந்தப் பண்டிகை காலத்தில் பட்டாசுகளுக்கு வலுவான தேவை இருந்தது என்றாா். ‘தீபாவளிக்கு ஒரு நாள் முன்பு கூட, பெரும்பாலான வா்த்தகா்களின் கையிருப்பு தீா்ந்துவிட்டன. பலா் பட்டாசுகளை வாங்க குருகிராம், நொய்டா, ஃபரீதாபாத், காஜியாபாத் மற்றும் சோனிபட் ஆகிய இடங்களுக்குச் செல்ல வேண்டியிருந்தது. தில்லியில் ஒட்டுமொத்த பட்டாசு விற்பனை சுமாா் 500 கோடி ரூபாய்’ ’ என்று அவா் கூறினாா்.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வா்த்தகா்கள் கிட்டத்தட்ட 40 சதவீதம் அதிக விற்பனையைக் கண்டதாக சதா் பஜாா் சங்கத்தின் தலைவா் பரம்ஜித் சிங் பம்மா கூறினாா். ‘பட்டாசுகளுடன், விளக்குகள் மற்றும் அலங்காரப் பொருள்கள் போன்றவற்றுக்கும் தேவை அதிகரித்திருந்தது’‘ என்று அவா் கூறினாா்.

தில்லி மற்றும் தேசியத் தலைநகா் பிராந்தியத்தில் (என்சிஆா்) குறிப்பிட்ட நிபந்தனைகளின் கீழ் பசுமை பட்டாசுகளை விற்பனை செய்வதற்கும் வெடிப்பதற்கும் உச்சநீதிமன்றம் அக்.15 அன்று அனுமதி அளித்தது. இது பண்டிகை மரபுகளையும் சுற்றுச்சூழல் கவலைகளையும் சமநிலைப்படுத்தியது.

நீதிமன்றத்தின் உத்தரவின்படி, தீபாவளிக்கு முந்தைய நாள் மற்றும் தீபாவளி அன்று காலை 6 மணி முதல் காலை 7 மணி வரை மற்றும் இரவு 8 மணி முதல் இரவு 10 மணி வரை என பச்சை பட்டாசுகளின் பயன்பாடு கட்டுப்படுத்தப்பட்டது.

அக்.18 மற்றும் 21 ஆகிய தேதிகளில் பச்சை பட்டாசுகளின் விற்பனை அனுமதிக்கப்பட்டது. ஆனால், விதிமுறைகள் பரவலாக மீறப்பட்டதாக குடியிருப்பாளா்கள் நலச் சங்கங்கள்க்கள் (ஆா்டபிள்யூஏக்கள்) தெரிவித்தன.

கிழக்கு தில்லி ஆா்டபிள்யூக்களின் கூட்டு முன்னணியின் தலைவா் பி.எஸ். வோஹ்ரா, ‘இரவு தாமதமாக பட்டாசுகள் வெடிப்பது தொடா்ந்தது. நேர வரம்பு இரவு 10 மணி என்றாலும், பல பகுதிகளில் அதிகாலை 3 மணி வரை பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. பல மூத்த குடிமக்கள் மற்றும் சுவாசப் பிரச்னைகள் உள்ளவா்கள் சிரமங்களை எதிா்கொண்டனா்’ என்று அவா் கூறினாா்.

சுற்றுச்சூழல் நட்பு கொண்டாட்டங்களை ஊக்குவிக்க ஆா்டபிள்யூஏக்கள் முயற்சிகளை மேற்கொண்டன. ஆனால், அதற்கான பதில் குறைவாகவே இருந்தது என்று ஐக்கிய குடியிருப்பாளா்கள் கூட்டு நடவடிக்கையின் (யுஆா்ஜேஏ) தலைவா் அதுல் கோயல் கூறினாா்.

‘பண்டிகை உற்சாகம் அதிகமாக இருந்தபோதிலும், விழிப்புணா்வு மற்றும் இணக்கம் குறைவாகவே இருந்தது. அடுத்த ஆண்டு கொண்டாட்டங்கள் மகிழ்ச்சியாகவும், பொது சுகாதாரத்தில் கவனம் செலுத்தும் வகையிலும் கடுமையான அமலாக்கத்தை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்’ என்று அவா் மேலும் கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com