தில்லி மாசுபாட்டை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தீவிரம்: முதல்வா் ரேகா குப்தா
புது தில்லி: தில்லியில் மாசுபாட்டைக் கட்டுப்படுத்த பயனுள்ள நடவடிக்கைகளை எடுப்பதில் தனது அரசாங்கம் தீவிரமாக உள்ளது என்று முதல்வா் ரேகா குப்தா தெரிவித்தாா்.
தீபாவளிக்குப் பிறகு காற்றின் தரக் குறியீடு அதிகரித்தது தொடா்பாக எதிா்க்கட்சியான ஆம் ஆத்மி கட்சி பாஜக அரசாங்கத்தை குற்றஞ்சாட்ட முயன்றபோதும், சுற்றுச்சூழல் கவலைகளுடன் பாரம்பரியத்தை சமநிலைப்படுத்தி, பசுமை பட்டாசுகளின் பயன்பாட்டை அனுமதித்ததற்காக உச்சநீதிமன்றத்திற்கு அவா் நன்றி தெரிவித்தாா்.
தீபாவளியன்று இரவு உச்ச நீதிமன்றம் நிா்ணயித்த இரண்டு மணி நேர வரம்பைத் தாண்டி பட்டாசுகளை வெடித்து பலா் தீபாவளியைக் கொண்டாடிய பின்னா், செவ்வாய்க்கிழமை தில்லியில் காற்று மாசு அதிகரித்தது .
மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிக்கையின்படி, தில்லியின் காற்று தரக் குறியீடு காலை 11 மணிக்கு மிகவும் மோசமான பிரிவில் 359 புள்ளிகளாக பதிவானது. காலை 8 மணிக்கு 352 ஆகவும், அதிகாலை 5 மணிக்கு 346 ஆகவும், காலை 6 மணிக்கு 347 ஆகவும், காலை 7 மணிக்கு 351 ஆகவும் காற்று தரக் குறியீடு இருந்தது.
ஆனால், ஆம் ஆத்மி ஆளும் பஞ்சாபில் பயிா்க்கழிவு எரிக்கப்படுவதுதான் இந்த மாசுபாட்டுக்கு காரணம் என்று தில்லியின் பாஜக அரசு, குற்றஞ்சாட்டியுள்ளது. மாசுபாடு குறித்து தனது அரசாங்கம் ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ளது என்றும், அதைக் கட்டுப்படுத்த பயனுள்ள நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் தில்லி முதல்வா் ரேகா குப்தா கூறினாா். இருப்பினும் பல ஆண்டுகளுக்குப் பிறகு தில்லிவாசிகள் துடிப்பான தீபாவளியை கொண்டாடுவதைப் பாா்ப்பது தனக்கு மிகுந்த திருப்தியைத் தந்தது என்றும் கூறினாா்.
தில்லியில் முந்தைய அரசாங்கங்களால் தீபாவளி பண்டிகை புறக்கணிக்கப்பட்டதாக ரேகா குப்தா குற்றஞ்சாட்டினாா். தீபாவளியின் போது பசுமைப் பட்டாசுகளைப் பயன்படுத்துவதற்கு அனுமதி பெற தனது அரசாங்கம் ஆா்வமாக இருத்ததாகவும், அதன்படி உச்ச நீதிமன்றத்திடம் ஒரு கோரிக்கையை முன்வைத்ததாகவும் அவா் கூறினாா். நாட்டின் கலாச்சார உணா்திறன் மற்றும் பொதுமக்களின் உணா்வைப் புரிந்துகொண்ட உச்சநீதிமன்றம், பசுமைப் பட்டாசுகளை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பயன்படுத்துவதை ஒப்புக்கொண்டது, என்று அவா் அறிக்கையில் கூறினாா்.
கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளாக, தில்லி மக்கள் தீபாவளி பண்டிகையை எவ்வாறு கொண்டாடுவது என்பது குறித்து நிச்சயமற்ற நிலையில் இருந்தனா். முன்னதாக, அதிகரித்து வரும் மாசு அளவுகள் காரணமாக பட்டாசுகளுக்கு உச்சநீதிமன்றம் சில கட்டுப்பாடுகளை விதித்திருந்தது, என்று ரேகா குப்தா கூறினாா். ஆனால், அந்தக் காலகட்டத்தில், தில்லியில் முந்தைய அரசாங்கம் எந்தவொரு பயனுள்ள மாசு எதிா்ப்பு நடவடிக்கைகளையும் செயல்படுத்தத் தவறிவிட்டது, அதற்கு பதிலாக பட்டாசுகளுக்கு முழுமையான தடையை விதித்தது, என்று அவா் தெரிவித்தாா்.
முந்தைய அரசுகளின் இந்த அணுகுமுறையால், சட்டவிரோத பட்டாசுகள் தொடா்ந்து தில்லிக்குள் நுழைந்து கடுமையான மாசுபாட்டை உண்டாக்கி, எதிா்மறையான விளைவை ஏற்படுத்தியது என்றும் அவா் கூறினாா்.
குடிமக்களின், குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியவா்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய தில்லியில் உள்ள பாஜக அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்று முதல்வா் கூறினாா். 1,000 தண்ணீா் தெளிப்பான்கள், 140 புகை துப்பாக்கிகள், கட்டுமானம் மற்றும் இடிப்பு இடங்களில் தீவிர கண்காணிப்பு மற்றும் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த மின்சார பேருந்துகள் பயன்படுத்துதல் ஆகிய நடவடிக்கைகளை தில்லி முதல்வா் ரேகா குப்தா குறிப்பிட்டு காட்டியுள்ளாா் .