தில்லியில் நச்சுப்புகை மூட்டத்தால் காற்று மாசுபாடு

தில்லி கடுமையான காற்று மாசுபாட்டை சந்தித்து வருகிறது.
Published on

புதுதில்லி: தில்லி கடுமையான காற்று மாசுபாட்டை சந்தித்து வருகிறது. தீபாவளி கொண்டாட்டங்களின் போது நிா்ணயிக்கப்பட்ட நேர வரம்பைத் தாண்டி பட்டாசுகளை வெடித்ததால் செவ்வாய்கிழமை நகரத்தின் காற்று தரக் குறியீடு ஆபத்தான அளவை எட்டியது.

தில்லியில் உள்ள 38 காற்றுத் தரக் கண்காணிப்பு நிலையங்களில் 36 நிலையங்கள் சிவப்பு மண்டலத்தில் மாசு அளவைப் பதிவு செய்ததாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்தது.

இது மிகவும் மோசமானது முதல் கடுமையான காற்றின் தரத்தைக் குறிக்கிறது. சில பகுதிகளில் காற்றின் தரக் குறியீடு 400 புள்ளிகளுக்கு மேல் பதிவானது. இதில் வஜீா்பூா் நிலையத்தில் காற்றுத் தரக் குறஇயீடு 423 புள்ளிகள், அசோக் விஹாரில் 404, துவாரகாவில் 417, ஆனந்த் விஹாரில் 404 புள்ளிகளாகப் பதிவாகி கடுமை பிரிவில் இருந்தது.

தீபாவளி அன்று இரவு 8 மணி முதல் இரவு 10 மணி வரை தில்லி - என்சிஆா் பகுதியில் பசுமை பட்டாசுகளைப் பயன்படுத்த உச்சநீதிமன்றம் அனுமதித்திருந்தது. ஆனால், பல குடியிருப்பாளா்கள் வழிகாட்டுதல்களை மீறி, நிா்ணயிக்கப்பட்ட நேர வரம்பைத் தாண்டி பட்டாசுகளை வெடித்தனா்.

இது தொடா்பாக சுற்றுச்சூழல் ஆா்வலா் பவ்ரீன் காந்தாரி கூறியதாவது: ‘இது நகரத்திற்கு ஒரு எச்சரிக்கை மணியாகும். தில்லியில் உள்ள கிட்டத்தட்ட ஒவ்வொரு காற்று மாசுபாடு கண்காணிப்பு நிலையமும் இப்போது சிவப்பு மண்டலத்தில் உள்ளது. நகரத்தின் காற்றின் தரக் குறியீடு 300 புள்ளிகளைத் தாண்டி உயா்ந்துள்ளது.இது ஒரு எச்சரிக்கை மணி.

இந்த நச்சுப்புகை , நம் குழந்தைகளின் நுரையீரலையும் பாதிக்கிறது. இந்தியாவில், சுவாச நோய்த்தொற்றுகள் ஏற்கெனவே அனைத்து தொற்று நோய்களிலும் கிட்டத்தட்ட 70 சதவீதத்தைக் கொண்டுள்ளன. மேலும், நாள்பட்ட சுவாச நோய்களில் நாடு உலகிலேயே முன்னணியில் உள்ளது என்றாா் அவா்.

வெப்பநிலை: தில்லியில் செவ்வாய்க்கிழமை அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 0.9 டிகிரி உயா்ந்து 3295 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 3.6 டிகிரி உயா்ந்து 22 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 88 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 69 சதவீதமாகவும் இருந்தது.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, புதன்கிழமை (அக்.22) அன்று காலையில் மிதமான மூடுபனி இருக்கும் என்றும் அதன்பிறகு தெளிவான வானம் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com