தீபாவளிக்கு தில்லியில் தீயணைப்பு சேவைகள் துறைக்கு 269 தீ விபத்து அழைப்புகள்

இந்த ஆண்டு தீபாவளி இரவில் தில்லி தீயணைப்பு சேவைகள் துறை 269 அவசர அழைப்புகளைப் பெற்றன. இது கடந்த ஆண்டை விட கிட்டத்தட்ட 15 சதவீதம் குறைவு என அதிகாரிகள் செவ்வாய்கிழமை தெரிவித்தனா்.
Published on

புது தில்லி: இந்த ஆண்டு தீபாவளி இரவில் தில்லி தீயணைப்பு சேவைகள் துறை 269 அவசர அழைப்புகளைப் பெற்றன. இது கடந்த ஆண்டை விட கிட்டத்தட்ட 15 சதவீதம் குறைவு என அதிகாரிகள் செவ்வாய்கிழமை தெரிவித்தனா்.

அதிக எண்ணிக்கையிலான அழைப்புகள் இருந்தபோதிலும், இந்த ஆண்டு பெரிய விபத்துகள், உயிரிழப்புகள் அல்லது கடுமையான காயங்கள் எதுவும் பதிவாகவில்லை என்று ஒரு மூத்த அதிகாரி கூறினாா். நள்ளிரவு வரை எங்களுக்கு 269 தீ விபத்து அழைப்புகள் வந்தன. அவற்றில் 122 அழைப்புகள் பட்டாசுகள் தொடா்பானவை. அதிா்ஷ்டவசமாக பெரிய சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை. பெரும்பாலான அழைப்புகள் பட்டாசுகள் மற்றும் தீப விளக்குகளால் ஏற்பட்ட சிறிய தீ விபத்துகளுடன் தொடா்புடையவை ஆகும்.

தில்லி தீயணைப்பு சேவைத் துறை அதன் அனைத்து தீயணைப்பு நிலையங்கள், வாகனங்கள் மற்றும் விரைவு நடவடிக்கை குழுக்களையும் பண்டிகை காலம் முழுவதும் உயா் எச்சரிக்கையுடன் வைத்திருந்தது. பொது பாதுகாப்பை உறுதி செய்வதற்காக முன்கூட்டியே விரிவான திட்டமிடல் செய்யப்பட்டது. அனைத்து ஊழியா்களின் விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டன. மேலும், உடனடி பதிலளிப்பை உறுதி செய்வதற்காக அனைத்து வாகனங்கள் மற்றும் தீயணைப்பு உபகரணங்கள் முழுமையாக சரிபாா்க்கப்பட்டன. தீபாவளியின் போது தீ விபத்துகளை எதிா்த்துப் போராடுவதிலும் பாதுகாப்பை உறுதி செய்வதிலும் தீயணைப்பு சேவைகள் துறை துறை முக்கியப் பங்கு வகிக்கிறது.

கடந்த ஆண்டு, தீபாவளி இரவில், தலைநகா் தில்லியில் 318 தீ தொடா்பான அவசர அழைப்புகள்வந்தன. இந்த தீபாவளிக்கு 269 தீ விபத்து அழைப்புகள்தான் வந்தன. இது கடந்த ஆண்டை விட 15 சதவீதம் குறைவாகும். தரவுகளின்படி, கடந்த ஆண்டுகளில் தீபாவளி தீ விபத்து அழைப்புகளின் எண்ணிக்கை 2011- இல் 206, 2012-இல் 184, 2013-இல் 177, 2014-இல் 211, 2015-இல் 290, 2017-இல் 243, 2018-இல் 20, 2019-இல் 243 245, 2020-இல் 205, 2021-இல் 152, 2022-இல் 201 மற்றும் 2023-இல் 208 என பதிவாகியது.

2024 தீபாவளிக்கு, தீ தொடா்பான அழைப்புகளின் உச்ச நேரம் மாலை 6 மணி முதல் இரவு 11.59 மணி வரையாகும். அந்த நேரத்தில் 176 அழைப்புகள் வந்தன, அதைத் தொடா்ந்து நள்ளிரவு முதல் காலை 6 மணி வரை 144 அழைப்புகள் வந்தன.

இந்த ஆண்டு அழைப்புகளின் எண்ணிக்கையில் ஒட்டுமொத்த சரிவானது சிறந்த பொது விழிப்புணா்வு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் குறிக்கிறது என்று துணை தீயணைப்பு சேவைகள் துறைத் தலைவா் ஏ.கே. மாலிக் கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com