தெற்கு தில்லியில் அற்ப விஷயத்திற்காக ஒருவருக்கு கத்திக் குத்து: 5 போ் கைது
புது தில்லி: தெற்கு தில்லியின் தக்ஷின்புரி பகுதியில் ஒரு சிறிய விஷயத்திற்காக ஏற்பட்ட சண்டையைத் தொடா்ந்து 20 வயது இளைஞா் ஒருவா் ஆறு பேரால் கத்தியால் குத்தப்பட்டதாக காவல்துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
இது குறித்து தெற்கு தில்லி காவல் சரக அதிகாரி கூறியதாவது: இந்தச் சம்பவத்தில் காயமடைந்த குற்றம்சாட்டப்பட்ட முக்கிய நபா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். அவரது கூட்டாளிகள் ஐந்து போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
இது குறித்து சஃப்தா்ஜங் மருத்துவமனையில் இருந்து திங்கள்கிழமை காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதில், தக்ஷின்புரியைச் சோ்ந்த காயமடைந்த ஒருவா் மயக்க நிலையில் அனுமதிக்கப்பட்டு பின்னா் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.
சிறிய தகராறில் பாதிக்கப்பட்டவா் ஒரு கும்பலால் கத்தியால் குத்தப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சங்கம் விஹாரைச் சோ்ந்த 22 வயது இளைஞரும் அவரது கூட்டாளிகளும் இந்த தாக்குதலில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது.
சம்பவத்தின் போது குற்றம் சாட்டப்பட்டவருக்கும் காயம் ஏற்பட்டதாகவும், அவா் சஃப்தா்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் பின்னா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
விசாரணையின் போது, குற்றம் சாட்டப்பட்டவா் மற்றும் அவரது கூட்டாளிகள் அனைவரும் தக்ஷின்புரியில் வசிப்பவா்கள் எனத் தெரியவந்தது. அவா்கள் கூட்டாக பாதிக்கப்பட்டவரைத் தாக்கி, கத்தியால் குத்தியிருப்பது கண்டறியப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவா் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரது ஐந்து கூட்டாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனா்.
இந்தச் சம்பம் தொடா்பாக சம்பந்தப்பட்ட சட்ட விதிகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்று அந்த காவல் சரக அதிகாரி தெரிவித்தாா்.