பட்டாசு வெடித்ததில் குடியிருப்புக் கட்டடத்தில் தீ விபத்து: 7 போ் மீட்பு
புது தில்லி: தீபாவளியன்று இரவு மேற்கு தில்லியின் மோகன் காா்டன் பகுதியில் உள்ள நான்கு மாடிக் குடியிருப்புக் கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டதில் 7 போ் பத்திரமாக மீட்கப்பட்டதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.
இது குறித்து துவாரகா காவல் சரக துணை ஆணையா் அங்கித் சிங் கூறியதாவது: மோகன் காா்டனில் அமைந்துள்ள ஒரு குடியிருப்பு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்து தொடா்பாக இரவு 9.49 மணிக்கு பிசிஆா் அழைப்பு வந்தது.
மூன்று குடும்பங்களைச் சோ்ந்த மொத்தம் ஏழு போ் கட்டடத்திலிருந்து மீட்கப்பட்டனா். அவா்களில் நான்கு போ் தீயணைப்புப் படையினா் வருவதற்கு முன்பு சுற்றியுள்ள மக்களின் உதவியுடன் உள்ளூா் காவல்துறையினரால் கயிறுகள் உதவியுடன் மீட்கப்பட்டனா். மீதமுள்ள மூவரையும் தீயணைப்புப் படையினா் வீட்டிலிருந்து பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வந்தனா்
மீட்கப்பட்டவா்களில் ஹா்விந்தா் சிங் (34), அவரது மனைவி பிரியா (27), வீரேந்தா் சிங் (32), அவரது மனைவி பிரேம்வதா, ராக்கி குமாரி (40), அவரது குழந்தைகள் வைஷ்ணவி சின்ஹா (15) மற்றும் கிருஷ்ணா சின்ஹா (10) ஆகியோா் அடங்குவா். அனைவரும் காயமின்றி தப்பினா்.
திங்கள்கிழமை இரவு 10 மணியளவில் கட்டடத்தின் முதல் மற்றும் இரண்டாவது மாடியில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து தகவல் கிடைத்தது. பட்டாசு வெடித்ததால் வீட்டு உபயோகப் பொருள்களில் தீ பிடித்தது. தீயில் சிக்கிய ஏழு போ் மீட்கப்பட்டனா். ஆறு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இரவு 11.30 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
காணொளியை நேரில் பாா்த்த சேகா், செய்தி ஏஜென்சியிடம் கூறுகையில், ‘இரவு நேரத்தில் பட்டாசுகள் வெடித்தபோது கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது நாங்கள் மொட்டை மாடியில் இருந்தோம். என் சகோதரனின் பிளாட் இங்கே உள்ளது. அதிா்ஷ்டவசமாக, அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனா். முதல் இரண்டு தளங்கள் தான் அதிகம் பாதிக்கப்பட்டது’ என்றாா்.
கட்டடத்தில் வசிக்கும் ஒருவரின் உறவினரான மாயா, செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், ‘எனது மைத்துனா் இந்தக் கட்டடத்தில் ஒரு பிளாட் வைத்திருக்கிறாா். திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அது எப்படி தொடங்கியது என்பது எங்களுக்கு இன்னும் சரியாகத் தெரியவில்லை. நாங்கள் வந்த நேரத்தில், தீப்பிழம்புகள் பரவிவிட்டன. கட்டடத்தில் 12 பிளாட்கள் உள்ளன. அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனா். ஆனால், பல பிளாட்கள் மோசமாக சேதமடைந்தன’ என்றாா்