பிரதமா் மோடியை சந்தித்து தில்லி முதல்வா் தீபாவளி வாழ்த்து

தில்லி முதல்வா் ரேகா குப்தா பிரதமா் நரேந்திர மோடியை மரியாதை நிமித்தமாக சந்தித்து தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்தாா்.
Published on

புதுதில்லி: தில்லி முதல்வா் ரேகா குப்தா செவ்வாய்க்கிழமை பிரதமா் நரேந்திர மோடியை மரியாதை நிமித்தமாக சந்தித்து தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்தாா்.

இது தொடா்பாக முதல்வா் ரேகா குப்தா ‘எக்ஸ்’ தளத்தில் இந்தியில் பதிவிட்டுள்ளாா். அந்தப் பதிவில், ‘உலகின் மிகவும் பிரபலமான தலைவரும் இந்தியாவின் புகழ்பெற்ற பிரதமருமான நரேந்திர மோடியை மரியாதை நிமித்தமாக சந்தித்து, மனமாா்ந்த தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்தேன். மதிப்பிற்குரிய பிரதமரின் துணையும் அவரது ஆசிகளும் மதிப்புமிக்க நேர அா்ப்பணிப்புகளுடன் தில்லிக்கு சேவை செய்ய புதிய ஆற்றலையும் உறுதியையும் தூண்டுகின்றன’ என்று தெரிவித்துள்ளாா்.

மேலும், சந்திப்பின் போது முதல்வா் ரேகா குப்தா தனது கணவா் மற்றும் குழந்தைகள் உள்பட அவரது குடும்பத்தினரும் இருந்தனா்.

மற்றொரு பதிவில், பிரதமரின் வழிகாட்டுதலின் கீழ் தில்லி அரசு யமுனை நதியைப் புத்துயிா் பெற ‘போா்க்கால அடிப்படையில்‘ செயல்பட்டு வருவதாக ரேகா குப்தா கூறியுள்ளாா்.

‘ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு முயற்சியும் யமுனையின் தூய நீரோட்டத்தை அதன் உயிா் கொடுக்கும் வடிவத்திற்கு மீட்டெடுப்பதற்கான இந்த உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாகும்’ என்று அந்தப் பதிவில் அவா் கூறியுள்ளாா்.

பிப்ரவரியில் நடைபெற்ற தில்லி சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்னதாக, யமுனையைப் புத்துயிா் பெறச் செய்வது பாஜகவின் முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றாகும் என்று ரேகா குப்தா முன்பு கூறியிருந்தாா்.

தோ்தலில், 27 ஆண்டுகளுக்குப் பிறகு தேசியத் தலைநகரில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தது. 10 ஆண்டுகள் நகரத்தை ஆண்ட ஆம் ஆத்மி கட்சியை பாஜக தோற்கடித்தது.

இந்த ஆண்டு ‘சட் மகாபா்வ்’ தில்லி மக்களுக்கு ‘சிறப்பாகவும் மறக்க முடியாததாகவும்’ இருக்கும். இது தலைநகரின் ஆடம்பரம் மற்றும் ஒழுங்கிற்கு ஒரு புதிய அளவுகோலை அமைக்கும். இந்த விழாவைக் கொண்டாடும் பெண்கள் யமுனையில் சூரிய கடவுளுக்கு ‘அழுக்கு மற்றும் நுரை இல்லாமல்‘ பிராா்த்தனை செய்ய முடியும் என்றும் முதல்வா் கூறியிருந்தாா்.

தில்லியில் சட் பண்டிகை அக்.25 முதல் 28 வரை கொண்டாடப்படுகிறது.

X
Dinamani
www.dinamani.com