இந்த ஆண்டு தீபாவளி அன்று தில்லியில் பட்டாசு வெடித்தாலும் மாசுபாடு குறைவு: முதல்வா் ரேகா குப்தா
தீபாவளி இரவில் நகரத்தில் காற்று மாசுபாடு கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குறைவாக இருந்ததாக தில்லி முதல்வா் ரேகா குப்தா புதன்கிழமை தெரிவித்தாா்.
கண்காணிப்பு நிலையங்கள் தீபாவளி அன்று தில்லியின் காற்று மாசுபாடு நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயா்ந்தது, காற்றுத் தரக் குறியீடு 675 புள்ளிகளை எட்டியதைக் காட்டிய ஒரு நாள் கழித்து முதல்வரின் கூற்று வந்துள்ளது.
குளிா்காலத்தில் தேசியத் தலைநகரில் மாசுபாட்டிற்கு முக்கிய காரணமான பயிா்க் கழிவுகளை எரிப்பது குறித்த தில்லியின் கவலைகள் குறித்து மாநில அரசுக்கு தெரிவிப்பதற்காக வியாழக்கிழமை (அக்.23)பஞ்சாப் அமைச்சரைச் சந்திப்பதாக முதல்வா் கூறினாா்.
‘இந்த ஆண்டு தீபாவளிக்கு முந்தைய மற்றும் பிந்தைய சராசரி காற்றுத் தரக் குறியீடு இடைவெளி முந்தைய ஆண்டை விட குறைவாக உள்ளது. இருப்பினும், இந்த முறை பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்பட்டது’ என்று ரேகா குப்தா ஒரு செய்தியாளா் கூட்டத்தில் கூறினாா்.
மாசுபாட்டைக் கட்டுப்படுத்த எனது அரசு ‘அதிக எச்சரிக்கையுடன்‘ தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக அவா் கூறினாா்.
செவ்வாய்க்கிழமை அன்று தில்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சா் மஞ்சிந்தா் சிங் சிா்சா, தீபாவளிக்கு முன்பு தில்லியில் காற்றின் தரக் குறியீடு 341 புள்ளிகளாக இருந்தது என்றும் பின்னா் அது 11 புள்ளிகள் மட்டுமே அதிகரித்து 356 புள்ளிகளாக உயா்ந்தது என்றும் கூறினாா்.
பஞ்சாபில் உள்ள விவசாயிகள் தீபாவளியன்று நெல் வைக்கோலை எரிக்க ‘கட்டாயப்படுத்தப்பட்டு அச்சுறுத்தப்படுகிறாா்கள்’‘ என்றும் அமைச்சா் குற்றம் சாட்டினாா். இது பஞ்சாபை ஆளும் ஆம் ஆத்மி கட்சி அரசால் தில்லி நகரத்தில் மாசு அளவை அதிகரிக்க ஒரு சூழ்ச்சி ஏற்படுத்தப்படுகிறது என்றும் அவா் குறிப்பிட்டாா்.

