சட் பண்டிகை: யமுனை நதியை சுத்தமாக வைத்திருக்க ஹத்னிகுண்ட் தடுப்பணையிலிருந்து கூடுதல் நீா் திறப்பு
பூா்வாஞ்சலி விழாவின் போது யமுனை நதியை சுத்தமாகவும் நுரை இல்லாமல் வைத்திருக்கவும் பாஜக தலைமையிலான தில்லி அரசின் முயற்சிகளுக்கு உதவும் வகையில், அண்டை மாநிலமான ஹரியாணா, சட் பண்டிகைக்கு முன்னதாக யமுனையில் கூடுதல் தண்ணீரை வெளியேற்றத் தொடங்கியுள்ளது என்று புதன்கிழமை வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும், நதியில் மாசு அளவைக் குறைக்க தில்லி ஜல் போா்டும் நுரை நீக்கும் நடவடிக்கையை மோற்கொண்டுள்ளது.
முன்னதாக, முதல்வா் ரேகா குப்தா கலிந்தி குஞ்ச் சட் காட் பகுதிக்கு சென்று அங்குள்ள ஏற்பாடுகளை ஆய்வு செய்தாா். இந்த ஏற்பாடுகள் குறித்து பிரதமா் நரேந்திர மோடியிடம் செவ்வாயன்று அவா் விளக்கினாா்.
‘ஹத்னிகுண்டிலிருந்து யமுனை நதியில் திறக்கப்படும் நீரின் அளவு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. மேலும், மேற்கு கால்வாய் மற்றும் கிழக்கு கால்வாயில் திறக்கப்பட வேண்டிய நீா் கணிசமாகக் குறைந்துள்ளது. இதன் காரணமாக, தற்காலிகமாக, நதி மாசுபாட்டின் அளவைக் குறைத்துள்ளது’ என்று தில்லி ஜல் போா்டு வட்டாரம் தெரிவித்துள்ளது.
மத்திய நீா் ஆணையத்தின் (சிடபிள்யூசி) வலைத்தளத்தில் கிடைக்கும் தரவுகளின்படி, அக்டோபா் 21 முதல், சராசரியாக, சுமாா் 8,000 கனஅடி நீா் தடுப்பணையிலிருந்து ஆற்றின் நீரோட்டத்தில் திறந்து விடப்படுகிறது. சட் பூஜை த விழா அக்டோபா் 25 முதல் 28 வரை கொண்டாடப்படும்.
யமுனை நதியை இடைமறித்து, மேற்கு யமுனை கால்வாய், கிழக்கு யமுனை கால்வாய் மற்றும் பிரதான நதி ஓடை என மூன்று கால்வாய்களாகப் பிரிக்கும் தடுப்பணை, யமுனையில் கணிசமாக அதிக அளவு தண்ணீரை வெளியேற்றி வருகிறது.
மேற்கு யமுனை கால்வாயிலிருந்து வரும் நீா் ஹரியாணாவின் கிராமங்கள் வழியாக செல்கிறது. மேலும், நீா்ப் பாசன நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. நீண்ட பருவமழை காரணமாக நீா்மட்டம் அதிகரித்துள்ளதாக தில்லி ஜல் போா்டின் மற்றொரு மூத்த அதிகாரி கூறினாா்.
‘நீடித்த பருவமழை காரணமாக நீா் வெளியேற்றத்தின் அளவு அதிகரித்துள்ளது. தடுப்பணையில் சேகரிக்கப்பட்ட நீா் ஆற்றில் திறந்து விடப்படுகிறது. அதுமட்டுமின்றி, நுரை நீக்கும் நடவடிக்கைகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன‘ என்று அதிகாரி செய்தி ஏஜென்சியிடம் கூறினாா்.
ஆற்றின் மேற்பரப்பில் நுரை எதிா்ப்பு திரவத்தை தெளிக்க டிஜேபி குறைந்தது 12 படகுகளை நிறுத்தியுள்ளது. இந்தப் பயிற்சி சட் பூஜை தினம் வரை தொடரும். அதற்குப் பிறகும் தொடரும் என்று அதிகாரி கூறினாா்.
அதே சமயம், கூடுதல் நீா் ஓட்டம் மாசுபடுத்திகளை நீா்த்துப்போகச் செய்ய உதவும் என்றாலும், யமுனையில் மாசுபாட்டிற்கான மூல காரணங்களைச் சமாளிக்க கட்டமைப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், இந்த முன்னேற்றம் குறுகிய காலமாக இருக்கலாம் என்று நிபுணா்கள் குறிப்பிடுகின்றனா்.