சாலைத் தடுப்பில் பைக் மோதியதில் 3 இளைஞா்கள் உயிரிழப்பு
தில்லியின் ஸ்வரூப் நகா் பகுதியில் உள்ள லிபாஸ்பூா் மேம்பாலம் அருகே ஜிடி சாலையில் உள்ள சாலை தடுப்பில் மோட்டாா் சைக்கிள் மோதியதில் மூன்று இளைஞா்கள் உயிரிழந்தனா் என்று போலீஸாா் தெரிவித்தனா்.
இது குறித்து காவல்துறை துணை ஆணையா் (வெளிப்புறம்) ஹரேஷ்வா் சுவாமி கூறியதாவது: இந்த விபத்து குறித்து அதிகாலை 1.33 மணிக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் குழு, சேதமடைந்த மோட்டாா் சைக்கிள் அருகே மூன்று போ் மயக்கமடைந்து கிடப்பதைக் கண்டனா். மூவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனா்.
முதற்கட்ட விசாரணையில், பாதிக்கப்பட்டவா்கள் இரவு உணவிற்குப் பிறகு முா்தாலில் இருந்து திரும்பி வந்தபோது, வேகமாக வந்த மோட்டாா் சைக்கிள் மேம்பாலத்தில் உள்ள தடுப்பில் மோதியது தெரியவந்தது. விபத்து நடந்த நேரத்தில் அவா்களில் யாரும் ஹெல்மெட் அணியவில்லை.
மூவரும் புராரியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். அங்கு மருத்துவா்கள் அவா்கள் ஏற்கெனவே இறந்துவிட்டதாக அறிவித்தனா். இறந்தவா்கள் நாங்லோய் பகுதியைச் சோ்ந்த சுமித் (27), மோஹித் (26) மற்றும் அனுராக் (23) என அடையாளம் காணப்பட்டனா்.
உடல்கள் உடல் கூறாய்வு பரிசோதனைக்காக பிணவறையில் பாதுகாக்கப்பட்டுள்ளன. உண்மைகள் மற்றும் மருத்துவக் கருத்தின் அடிப்படையில், பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்) பிரிவுகள் 281 (விபத்தால் வாகனம் ஓட்டுதல்) மற்றும் 106(1) (அலட்சியத்தால் மரணத்தை ஏற்படுத்துதல்) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் விசாரணை நடந்து வருகிறது என்று காவல் துணை ஆணையா் தெரிவித்தாா்.