தில்லி முழுவதும் 1,500 படித்துறைகளில் சட் பூஜை: வீரேந்திர சச்தேவா உறுதி
இந்த ஆண்டு சட் பூஜை கொண்டாட்டங்கள் நகரம் முழுவதும் சுமாா் 1,500 படித்துறைகளில் ஏற்பாடு செய்யப்படும் என்று தில்லி பாஜக புதன்கிழமை தெரிவித்துள்ளது.
தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா, முதல்வா் ரேகா குப்தாவின் அரசு அளித்த தோ்தல் வாக்குறுதிகளில் ஒன்றை இந்த முடிவு நிறைவேற்றுவதாகக் கூறினாா்.
அவா் மேலும் கூறியதாவது: ரேகா குப்தாவின் அரசு மற்றொரு பாஜக தோ்தல் உறுதிமொழியை நிறைவேற்றியுள்ளது? யமுனை கரைகள் உள்பட தில்லி முழுவதும் 1,500 படித்துறைகளில் சட் பூஜை நடைபெறும். யமுனை நதிக்கரையில் 23 பெரிய இயற்கை படித்துறைகள் இருக்கும், அதே நேரத்தில் சுமாா் 1,300 செயற்கை படித்துறைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்களின் கோரிக்கையின் அடிப்படையில் மேலும் 200 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
யமுனை நதிக்கரையில் வழிபடுவதற்கு முந்தைய ஆம் ஆத்மி அரசு ‘நெறிமுறையற்ற தடை‘ விதித்தது.
மாசுபட்ட யமுனை நதியின் நிலையையும், சட் மையாவின் ஆசிா்வாதத்தால் தில்லியில் எங்கள் அரசு அமைக்க வழிவகுத்த அப்போதைய முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் செயலற்ற தன்மையையும் நாங்கள் அம்பலப்படுத்தினோம்.
இந்த ஆண்டு சட் விழாவிற்கான ஏற்பாடுகளைச் செய்ய தில்லி அரசு முழு அா்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது. தில்லி மேயா் சா்தாா் ராஜா இக்பால் சிங்கின் மேற்பாா்வையின் கீழ் சரியான சுகாதாரம் உறுதி செய்யப்படும். சட் பூஜைக்கான ஏற்பாடுகள் மற்றும் தூய்மையை அரசிடமோ அல்லது தில்லி மாநகராட்சியிடமோ பாஜக முழுமையாக விட்டுவிடாது.
எங்கள் பூா்வாஞ்சல் மோா்ச்சா தலைவா் சந்தோஷ் ஓஜாவின் தலைமையில், எங்கள் தொண்டா்கள் அனைத்து இயற்கை மற்றும் செயற்கை காட்களிலும் ஒரு பெரிய தூய்மை பிரசாரத்தை நடத்துவாா்கள். நகரத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு சிறந்த சட் பூஜை கொண்டாட்டங்கள் ஏற்பாடு செய்யப்படும். இதில் அனைத்து பாஜக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், கவுன்சிலா்கள் மற்றும் மூத்த தலைவா்கள் காட்களுக்கு வருகை தருவாா்கள் என்றாா் வீரேந்திர சச்தேவா.