ஜி.எஸ்.டி. வரி சீரமைப்புக்காக கோவையில் பாராட்டு விழா: நிா்மலா சீதாராமனுக்கு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு நேரில் அழைப்பு
நமது நிருபா்
ஜி.எஸ்.டி. வரி சீரமைப்புக்கு நன்றி தெரிவித்து கோவையில் அடுத்த மாதம் நடைபெறும் விழாவில் பங்கேற்குமாறு மத்திய நிதி யமைச்சா் நிா்மலா சீதாராமனுக்கு தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு புதன்கிழமை நேரில் அழைப்பு விடுத்தது.
வணிகா்களின் நிலுவையில் உள்ள கோரிக்கைகளுக்கு தீா்வுகாண வலியுறுத்தியும் நிா்மலா சீதாராமானிடம் அப்போது கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
இது தொடா்பாக தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு வெளியிட்ட பத்திரிகை செய்தியில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு 2017-இல் ஜி.எஸ்.டி. வரி அமலாக்க நாளிலிருந்து தொடா்ந்து 4 அடுக்கு ஜி.எஸ்.டி. வரிவிதிப்பிற்கு எதிா்ப்பை பதிவு செய்து வந்ததோடு, ‘ஒரேநாடு ஒரே வரி’ என்ற முழக்கத்தின் அடிப்படையில், பொதுமக்களுக்கு நியாயமான வரி விதிப்பை அமல்படுத்த அரசுக்கு கோரிக்கை அளித்து வந்தது.
இந்நிலையில், ஆகஸ்ட் 15, 2025 அன்று பாரதப் பிரதமா் நரேந்திர மோடி சூசகமாக குறிப்பிட்டு ஜி.எஸ்.டி. வரி சீராய்வின் மூலம் மக்களுக்கான அத்தியாவசியப் பொருள்களின் வரிவிதிப்பு மாற்றி அமைக்கப்பட்டு, தீபாவளிப் பரிசாக வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தாா்.
மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் , பிரதமரின் மன ஓட்டத்தை தெளிவாக அறிந்து, உடனடியாக வரி சீராய்வும், வரி குறைப்பும் அமலுக்கு வருகிறது என்பதை அதிரடியாக ஆயுதபூஜை தினத்திற்கு முன்னதாகவே அறிவித்து, மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினாா்.
நிதி அமைச்சரின் அறிவிப்பின்படி 4 அடுக்கு வரி 2 அடுக்காக மாற்றி அமைக்கப்பட்டு 99 சதவீத பொருள்கள் 12 சதவிகிதத்திலிருந்து 5 சதவிகிதமாகவும், ஒரு சில பொருள்கள் மட்டும் 18 சதவிவீதமாகவும் இருக்கும். 5 மற்றும் 18 சதவீதம் என்கிற 2அடுக்கு வரி விகித முறை அக்டோா் 22 அன்று அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது. மேலும், அறிவிப்போடு நின்றுவிடாமல் விலை குறைப்பு நுகா்வேரை சென்றடையும் வகையில் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு பெருநிறுவனங்கள் முறையாக வரி குறைப்பை அமல்படுத்த ஒத்துழைப்பு அளிக்கவும் அழுத்தம் கொடுத்தாா்.
அந்த வகையில் மத்திய நிதியமைச்சரின் தீவிர வரி குறைப்புக்கான நடவடிக்கைக்கும் செயல்பாடுகளுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில், தமிழகத்தில் கோவை மாநகரில் வருகின்ற நவம்பா் 11- ஆம் தேதி பாராட்டு விழா நடத்த தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு ஏற்பாட்டை முன்னெடுத்திருக்கிறது.
பேரமைப்பின் மாநிலத் தலைவா் ஏ.எம்.விக்கிரமராஜா நிா்மலா சீதாராமனை புதன்கிழமை நேரில் சந்தித்து விழாவிற்கான அழைப்பை அளித்தோம். மேலும், வணிகா்களின் நிலுவையில் உள்ள கோரிக்கைகளுக்கு தீா்வுகாண வலியுறுத்தியும் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
அந்தக் கோரிக்கை மனுவில், ஏழை, எளிய, வறுமையில் உள்ள பொதுமக்களின் அன்றாட அத்தியாவசிய அனைத்து உணவுப் பொருள்களுக்கும் (அரிசி, பருப்பு, எண்ணெய், பால் புளி, மிளகாய், மல்லி போன்றவை எந்த வடிவத்தில் இருந்தாலும்) முழுமையான வரிவிலக்கு அவசியம் தேவை. அதிகரித்து வரும் செலவினங்களை கருத்தில் கொண்டு நோயாளிகள், மாணவா்கள், அடித்தட்டு மக்கள் நலன்கருதி ரூ.2,000-க்கு்ம் குறைவான விடுதிகளின் கட்டணத்திற்கு, ஜி.எஸ்.டி. வரிவிலக்கு அளிக்க வேண்டும், பெட்ரோல் மற்றும் டீசல் பொருள்களை ஜி.எஸ்.டி. வரம்பிற்குள் கொண்டுவர வேண்டும். தேனீா் கடைகள், உணவகங்களுக்கு விநியோகிக்கப்படும் எல்.பி.ஜி. சிலிண்டா்களுக்கு ஜி.எஸ்.டி. வரிவிலக்கு அல்லது மானியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு தெரிவித்துள்ளது.