வாகனம் மோதியதில் ஊனமுற்ற எல்.ஐ.சி. முகவருக்கு ரூ.75.30 லட்சம் இழப்பீடு வழங்க தீா்ப்பாயம் உத்தரவு

Published on

நான்கு ஆண்டுகளுக்கு முன் சாலையில் சென்ற போது வாகனம் மோதிய விபத்தில் 80 சதவீத நிரந்தர ஊனத்தை சந்தித்த எல்.ஐ.சி. முகவருக்கு ரூ.75 லட்சத்திற்கும் மேல் இழப்பீடு வழங்க தில்லி தீா்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஜூன் 10, 2021 அன்று நங்லோயில் வேகமாக வந்த வாகனம் தனது ஸ்கூட்டி மீது மோதியதில் பலத்த காயமடைந்த கீதா கோயல் தாக்கல் செய்த உரிமைகோரல் மனுவை தீா்ப்பாயத்தின் நீதிபதி சச்சின் குப்தா விசாரித்தாா்.

அக்டோபா் 15 தேதியிட்ட உத்தரவில், ‘வாகனம் வேகமாகவும் அலட்சியமாகவும் ஓட்டப்பட்டதால் விபத்து ஏற்பட்டது என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. மனுதாரருக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளதோடு, அவரது இடது மேல் மூட்டு மற்றும் இருபுற கீழ் மூட்டு ஊனம் உள்பட 80 சதவீத அளவிற்கு நிரந்தர ஊனமும் ஏற்பட்டுள்ளது என்பது பதிவேட்டில் இருந்து தெளிவாகிறது’ என்று தீா்ப்பாயம் கூறியது.

இந்தக் குறைபாடு காரணமாக, கீதா கோயல் வாழ்க்கையின் பொதுவான வசதிகளை அனுபவிக்க முடியவில்லை என்றும் தீா்ப்பாயம் கூறியது. பின்னா் தீா்ப்பாயம் பல்வேறு பிரிவுகளின் கீழ் ரூ.75.30 லட்சத்திற்கும் அதிகமான இழப்பீடு வழங்கியது.

காப்பீட்டாளா் ஸ்ரீராம் ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட், இழப்பீட்டுத் தொகையை செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது என்றும் தீா்ப்பாயம் கூறியது.

X
Dinamani
www.dinamani.com