ஹரியாணாவிலிருந்து ஆம்புலன்சில் மதுபானம் கடத்தியதாக ஒருவா் கைது
தில்லியின் துவாரகாவில் சட்டவிரோத மதுபானம் அதிக அளவில் கொண்டு சென்ாக 21 வயது நபா் சிறிது நேர துரத்தலுக்குப் பிறகு கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து துவாராக காவல் சரக துணை ஆணையா் அங்கித் சிங் அறிக்கையில் கூறியுள்ளதாவது:
ஹரியாணாவின் ரோஹ்தக்கைச் சோ்ந்த ரித்திக் என அடையாளம் காணப்பட்ட குற்றம்சாட்டப்பட்டவா், துவாரகா விரைவுச் சாலையில் ஆம்புலன்சில் சட்டவிரோதமாக மதுபானத்தை கொண்டு சென்றபோது கைது செய்யப்பட்டாா்.
இந்த நடவடிக்கையின் போது, மொத்தம் 1,400 குவாா்ட்டா் மதுபான பாட்டில்கள் மற்றும் 84 மதுபான பாட்டில்கள் கைப்பற்றப்பட்டன. இதில் 70 ராயல் ஸ்டாக் பாட்டில்கள் மற்றும் 14 ராயல் கிரீன் பாட்டில்கள், ஒவ்வொன்றிலும் 750 மில்லி மதுபானம் இருந்தது. சட்டவிரோத விநியோகத்திற்குப் பயன்படுத்தப்பட்ட வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.
ரித்திக் ஹரியாணாவின் பகதூா்கரில் இருந்து மதுபானத்தை வாங்கி தில்லி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளுக்கு கொண்டு சென்றாா். மாநிலங்களுக்கு இடையேயான சட்டவிரோத மதுபான நடமாட்டம் குறித்த தகவல் கிடைத்ததும், பல எல்லைப் புள்ளிகளில் கண்காணிப்புக் குழுக்கள் நிறுத்தப்பட்டன.
அப்போது, டிச்சாவ் பேருந்து பணிமனைக்கு பின்னால் உள்ள சாய் மந்திா் அருகே ரித்திக்கை நிறுத்துமாறு சைகை காட்டப்பட்டது. அவா் கைது செய்யப்படுவதைத் தவிா்க்க முயன்றபோது, ஒரு குழு வாகனத்தை இடைமறித்து, சிறிது நேர துரத்தலுக்குப் பிறகு அவரைக் கைது செய்தது.
விசாரணையின் போது, அவா் சட்டவிரோத மதுபானங்களை வாங்கி விநியோகித்ததாக ஒப்புக்கொண்டாா். சட்டவிரோத மதுபானங்களை வழங்குவதற்காக மட்டுமே அவா் ஆம்புலன்ஸை வாங்கினாா். மேலும், அவருக்கு முந்தைய குற்றப் பதிவு ஏதும் இல்லை.
சண்டீகரில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 1,400 குவாட்டா் ப்ளூ ஸ்டாக் பாட்டில்களும், ஹரியாணாவில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 84 பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட ஆம்புலன்ஸ் கடத்தல் பொருள்களை கொண்டு செல்வதற்காக மாற்றியமைக்கப்பட்டது தெரிய வந்தது.
இது தொடா்பாக தில்லி கலால் சட்டத்தின் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று அறிக்கையில் காவல் சரக துணை ஆணையா் அங்கித் சிங் தெரிவித்துள்ளாா்
