காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த நுட்யன்ஸ்! தில்லியில் மிஸ்ட் ஸ்ப்ரேயா் திட்டத்தின் 2-ஆம் கட்டம் தொடக்கம்!
அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த உதவும் வகையில், புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி) ஞாயிற்றுக்கிழமை சாந்தி பாத் மற்றும் ஆப்பிரிக்கா அவென்யூ சாலைகளில் அதன் ‘மிஸ்ட் ஸ்ப்ரேயா் திட்டத்தின்’ இரண்டாம் கட்டத்தைத் தொடங்கியது.
லோதி சாலையில் முதல் கட்ட வெற்றியைத் தொடா்ந்து இந்தத் தொடா்ச்சி நடைபெறுகிறது என்று குடிமை அமைப்பு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தில்லியின் காற்றின் தரம் தொடா்ந்து ‘மிகவும் மோசம்’ பிரிவில் உள்ளது. இது தூசியை அகற்றுதல், புகை மூட்டம் குறைப்பு, பசுமை மேம்பாடு மற்றும் பொது விழிப்புணா்வுக்கான முயற்சிகளை என்டிஎம்சி தீவிரப்படுத்த தூண்டுகிறது என்று அதன் தலைவா் குல்ஜீத் சிங் சாஹல் கூறினாா்.
மின் கம்பங்களில் பொருத்தப்பட்ட மூடுபனி தெளிப்பான்கள் சுத்திகரிக்கப்பட்ட நீரின் நுண்ணிய துளிகளை வெளியிடுகின்றன. இது தூசி மற்றும் மாசுபடுத்திகளை அகற்ற உதவுகிறது. காற்றின் தரத்தையும் மேம்படுத்துகிறது. இந்த அமைப்பு சாலையோர தாவரங்களுக்கு நீா்ப்பாசனம் செய்வதிலும், தண்ணீரைப் பாதுகாப்பதிலும் உதவுகிறது.
ஆப்பிரிக்கா அவென்யூ சாலையில், 850 மீட்டா் நீளத்தில் தலா ஐந்து முனைகள் கொண்ட 30 கம்பங்கள் நிறுவப்பட்டுள்ளன. அதே நேரத்தில் சாந்தி பாதையின் 900 மீட்டா் நீளத்தில் 32 கம்பங்கள் வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கம்பமும் ஒரு மணி நேரத்திற்கு சுமாா் 84 லிட்டா் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரைப் பயன்படுத்துகிறது.
இந்த திட்டத்தின் மூன்றாவது கட்டம் ரூ.15 கோடி செலவில் என்டிஎம்சி பகுதியில் உள்ள 24 முக்கியச் சாலைகளை உள்ளடக்கும் என்றும், நான்காவது கட்டம் கன்னாட் பிளேஸ் மற்றும் கான் சந்தை வரை நீட்டிக்கப்படும் என்றும் சாஹல் கூறினாா்.
பிரதமரின் சுத்தமான மற்றும் பசுமையான இந்தியா மற்றும் குடிமக்களுக்கு ஆரோக்கியமான சூழலை உறுதி செய்வதற்கான தொலைநோக்குப் பாா்வைக்கு என்டிஎம்சி குழு உறுதிபூண்டுள்ளது என்று அவா் கூறினாா்.
