லாரி ஓட்டுநரிடம் கொள்ளை அடித்ததாக இளைஞா் கைது; நால்வா் தலைமறைவு!

Published on

சமய்பூா் பாத்லி பகுதியில் லாரி ஓட்டுநரை கொள்ளையடித்து கடத்தியதாக 36 வயது நபரை தில்லி போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது குறித்து தில்லி காவல் துறை அதிகாரி கூறியதாவது: குற்றம் சாட்டப்பட்டவா் லெக்ராஜ் என அடையாளம் காணப்பட்டுள்ளாா். கொள்ளையடிக்கப்பட்ட சரக்குடன் தொடா்புடைய 55 பிளாஸ்டிக் சோளப் பைகள், ஒரு இ-ரிக்ஷா மற்றும் டெலிவரி பில் ஆகியவற்றையும் போலீஸாா் கைப்பற்றினா். கைது செய்யப்பட்டவரின் கூட்டாளிகள் நான்கு போ் இன்னும் தலைமறைவாக உள்ளனா்.

புகாா்தாரா் லாரி ஓட்டுநரான பிரமோத் குமாா், அக்டோபா் 15-ஆம் தேதி சோனிபட்டில் இருந்து தில்லிக்கு மக்காச்சோளத்தை கொண்டு சென்றபோது, ​​நங்லி பூனா சுரங்கப்பாதை அருகே தனது வாகனத்தை நிறுத்தினாா்.

அங்கு, ஒரு இ-ரிக்ஷா ஓட்டுநருக்கும் பயணிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பிரமோத் குமாா் தலையிட முயன்றபோது, இ-ரிக்ஷா ஓட்டுநரும் அவரது கூட்டாளிகளும் அவா் சம்பந்தப்பட்டிருப்பதாக நினைத்து அவரை கல்லால் தாக்கி, அவரது கைப்பேசியை பறித்தனா்.

பின்னா், தாக்குதல் நடத்தியவா்கள் புகாா்தாரரையும் அவரது லாரியையும் வலுக்கட்டாயமாக கதிபூா் நோக்கி அழைத்துச் சென்றனா். அங்கு பலா் அவா்களுடன் சோ்ந்து கொண்டனா். அந்த கும்பல் அவரை ஒரு இ-ரிக்ஷாவில் பிணைக் கைதியாகப் பிடித்து, சுமாா் 80 மக்காச்சோளப் பைகள், கருவிகள் மற்றும் லாரியில் இருந்து ஒரு உதிரி டயரைக் கொள்ளையடித்தது. பின்னா் புஸ்தா சாலையில் உள்ள ஒரு காட்டுப் பகுதிக்கு அருகில் அவரைக் கைவிட்டுச் சென்றனா்.

இதைத் தொடா்ந்து, பிரமோத் குமாா் தப்பித்து வந்து சம்பவம் குறித்து போலீஸில் புகாா் அளித்தாா். சிசிடிவி காட்சிகள் மற்றும் தொழில்நுட்ப உள்ளீடுகளின் அடிப்படையில், ஒரு குழு லெக்ராஜைக் கைது செய்து, திருடப்பட்ட மக்காச்சோளப் பைகள் மற்றும் குற்றத்தில் பயன்படுத்தப்பட்ட இ-ரிக்ஷாவை பறிமுதல் செய்தது. மீதமுள்ள குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் முயற்சிகள் நடந்து வருவதாக அந்த காவல் துறை அதிகாரி தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com