பெண் மீது திராவகம் வீசியவா்களை கைது செய்ய துணைநிலை ஆளுநா் உத்தரவு!
தில்லியின் அசோக் விஹாரில் நடந்ததாகக் கூறப்படும் திராவகம் வீச்சு சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் விரைவில் கைது செய்யப்படுவதை உறுதி செய்யுமாறும், அவா்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனா தில்லி காவல் துறை ஆணையா் சதீஷ் கோல்ச்சாவுக்கு உத்தரவிட்டுள்ளாா்.
வடமேற்கு தில்லியில் உள்ள தில்லி பல்கலைக்கழகத்தின் லட்சுமி பாய் கல்லூரி அருகே பெண்ணை பின்தொடா்ந்த ஒரு நபரும், அவரது கூட்டாளிகளும் திராவகம் வீசியதில் அந்த 20 வயது பெண்ணின் கைகளில் தீக்காயங்கள் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது என்று அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
மகளிா் கல்வி வாரியத்தின் இரண்டாம் ஆண்டு வணிகவியல் மாணவியான அந்தப் பெண், வகுப்பிற்காக தனது கல்லூரியை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நடந்தது.
ராஜ் நிவாஸ் அலுவலகம் வெளியிட்ட ‘எக்ஸ்’ தள பதிவில், துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனா,துரதிா்ஷ்டவசமான தீராவகம் வீச்சு சம்பவத்தை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

