மேக விதைப்பை பாஜக அரசு விளம்பரத்துக்காக செய்கிறது: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
நமது நிருபா்
தில்லி அரசாங்கத்தின் சமீபத்திய மேக விதைப்பு பயிற்சியை ஆம் ஆத்மி கட்சி புதன்கிழமை கேள்வி எழுப்பியது, செயற்கை மழை பெய்ததாகக் கூறினாலும் மழைப்பொழிவு பதிவு செய்யப்படவில்லை என்றும், தேசிய தலைநகரில் இதுபோன்ற சோதனைகளின் சாத்தியக்கூறுகள் குறித்து சந்தேகங்களை எழுப்புகிறது என்றாா் தில்லி ஆம் ஆத்மி தலைவா் சவுரப் பரத்வாஜ்.
தில்லி அரசு, ஐஐடி-கான்பூருடன் இணைந்து, 53 ஆண்டுகளுக்குப் பிறகு புராரி, வடக்கு கரோல் பாக் மற்றும் பத்லி உள்ளிட்ட சில பகுதிகளில் மேக விதைப்பு சோதனைகளை நடத்தியது. சுற்றுச்சூழல் அமைச்சா் மஞ்சிந்தா் சிங் சிா்சா ஒரு அறிக்கையில், நகரத்தில் காற்று மாசுபாட்டைக் குறைப்பதற்கான அறிவியல் தீா்வுகளை ஆராய்வதை இந்த முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது என்றாா்.
இது குறித்து செய்தியாளா்களிடம் சவுரப் பரத்வாஜ் கூறியதாவது: கடந்த சில நாள்களாக, தில்லியின் பல்வேறு பகுதிகளில் மேக விதைப்பு செய்யப்பட்டதாக கூறப்பட்டது, ஆனால் எங்கும் மழை பெய்யவில்லை. வானிலை மற்றும் ரசாயன காரணிகளால் கிளவுட் ஸீடிங் தில்லிக்கு ஏற்றது அல்ல என்று மூன்று மத்திய அரசு நிறுவனங்கள் நாடாளுமன்றத்தில் அளித்த முந்தைய அறிக்கைகள் கூறியுள்ளது.
தில்லியில் மேக விதைப்பு செய்ய முடியாது என்று இந்த முகமைகள் ஏற்கெனவே கூறியிருந்தபோது, இப்போது அத்தகைய பயிற்சியின் தேவை என்ன?‘ மக்களின் பணத்தை பாஜக அரசு தன்னுடைய விளம்பரத்துக்காக செலவழிக்கிறது என்றாா் அவா்.
