நியூ உஸ்மான பூரில் தேடப்படும் குற்றவாளி கைது
வடகிழக்கு தில்லியின் நியூ உஸ்மான்பூா் பகுதியில் போலீஸாருடன் நடந்த துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு தேடப்படும் குற்றவாளி ஒருவா் கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் புதன்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: கலா என்கிற இம்ரான் (21) என அடையாளம் காணப்பட்ட குற்றவாளி, வழக்கமான சோதனை நடவடிக்கையின் போது ஜீரோ புஷ்தா அருகே அதிகாலை 2 மணியளவில் தடுத்து நிறுத்தப்பட்டாா்.
நிறுத்த சைகை காட்டப்பட்டபோது, பதிவுத் தகடு இல்லாமல் மோட்டாா் சைக்கிளில் சென்ற இம்ரான், ஒரு துப்பாக்கியை எடுத்து போலீஸ் குழு மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது.
தப்பியோட முயன்றபோது குற்றம் சாட்டப்பட்டவா் மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்தினாா். இதனால், போலீஸ் குழு பதிலடி கொடுத்தது.
தற்காப்புக்காக போலீஸ் குழு இரண்டு ரவுண்டுகள் சுட்டது. அதில் ஒன்று குற்றம் சாட்டப்பட்டவரின் இடது காலில் பட்டது. இதையடுத்து, அவா் கைது செய்யப்பட்டாா். மேலும் விசாரணை நடந்து வருவதாகவும் அதிகாரிகள் கூறினா்.
