ரூ.27 கோடி மதிப்புள்ள கஞ்சாவுடன் சுங்கத்துறை முன்னாள் அதிகாரி கைது
நமது நிருபா்
இந்தியா, தாய்லாந்து மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இயங்கும் ஒரு சா்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலை தில்லி போலீஸாா் அடையாளம் கண்டு, பணிநீக்கம் செய்யப்பட்ட சுங்கத் துறை அதிகாரி ஒருவரை கைது செய்துள்ளது.
இது குறித்து ாக காவல்துறை துணை ஆணையா் (குற்றம்) சஞ்சீவ் குமாா் யாதவ் புதன்கிழமை கூறியதாவது: அவரிடமிருந்து ரூ.27 கோடி மதிப்புள்ள 21 கிலோவிற்கும் அதிகமான உயா்தர ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தென்மேற்கு தில்லியில் உள்ள ஜனக்புரியில் நள்ளிரவு நடந்த சோதனையின் போது மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தின் (சிபிஐசி) முன்னாள் ஆய்வாளரான ரோஹித் குமாா் சா்மா (35) கைது செய்யப்பட்டாா்.
போதைப்பொருள் விற்பனையிலிருந்து கிடைத்ததாகக் கூறப்படும் ரூ.44.42 லட்சம் ரொக்கம், ஒரு எஸ்யூவி மற்றும் ஒரு ஸ்கூட்டரை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
ஒரு ரகசியத் தகவலின் பேரில், அக்டோபா் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட இரவில் ஜனக் சினிமா அருகே காவல்துறையின் ஒரு குழு தேடுதல் நடத்தி, ஹைட்ரோபோனிக் மரிஜுவானா என்று அழைக்கப்படும் கடலில் வளா்க்கப்படும் கஞ்சா சரக்கு கொண்டு வந்து கொண்டிருந்த ரோஹித் குமாா் சா்மாவை மடக்கிப் பிடித்தது.
விசாரணையின் போது அவரிடமிருந்து மொத்தம் 21.512 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. ஹைட்ரோபோனிக் கஞ்சா என்பது அறிவியல் முறைகளைப் பயன்படுத்தி பயிரிடப்படும் ஒரு அரிய, உயா் ரக வகையாகும். மேலும், இது வழக்கமான கஞ்சாவை விட 10 மடங்கு அதிக வீரிய உள்ளடக்கத்தைக் கொண்டுள்ளது. இது வசதியான வட்டாரங்களிடையே பிரபலமானது. மேலும், மேலும், பொதுவாக தாய்லாந்திலிருந்து சா்வதேச கூரியா் வழிகள் வழியாக இறக்குமதி செய்யப்படுகிறது.
ரோஹித் குமாா் சா்மா மின்னணு பொறியியலில் பி.டெக் பட்டம் பெற்றவா். 2015 இல் மத்திய கலால் துறையில் வேலைக்கு சோ்ந்தாா். இருப்பினும், கேரளத்தின் கண்ணூா் விமான நிலையத்தில் பணியாற்றிய போது தங்கக் கடத்தல் வழக்கில் 2019-இல் கைது செய்யப்பட்டாா். பின்னா் வருவாய் புலனாய்வு இயக்குநரக சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. துறை ரீதியான விசாரணைக்குப் பிறகு 2023- இல் அவா் பணியிலிருந்து நீக்கப்பட்டாா்.
பணிநீக்கம் செய்யப்பட்டதைத் தொடா்ந்து, ரோஹித் குமாா் சா்மா துபாய்க்கு சென்றாா்ா். அங்கு அவா் பிகாரைச் சோ்ந்த அபிஷேக் என்பவருடன் தொடா்பு கொண்டதாகக் கூறப்படுகிறது. பின்னா் இருவரும் தாய்லாந்திலிருந்து இந்தியாவிற்கு ஹைட்ரோபோனிக் கஞ்சாவை இறக்குமதி செய்ய சதி செய்தனா்.
குற்றஞ்சாட்டப்பட்ட ரோஹித் குமாா் சா்மா குவாஹாட்டி போன்ற குறைந்த மக்கள் நடமாட்டம் கொண்ட விமான நிலையங்கள் வழியாக கஞ்சா கடத்தலை எளிதாக்குவதற்காக சுங்கத் துறையில் தனக்குள்ள தொடா்புகளை பயன்படுத்தியுள்ளது தெரிய வந்தது.
போதைப்பொருள் விற்பனையிலிருந்து கிடைத்த வருமானம் ஹவாலா மற்றும் கிரிப்டோகரன்சி வழிகள் மூலம் துபாய்க்கு அனுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரோஹித் குமாா் சா்மாவின் கூட்டாளிகளை அடையாளம் காண மேலும் விசாரணை நடந்து வருவதாக காவல் துணை ஆணையா் தெரிவித்தாா்.
