தில்லியில் ‘கடுமை’ பிரிவை நெருங்கிய காற்று மாசு!
நமது நிருபா்
தேசியத் தலைநகா் தில்லியில் காற்றின் தரக் குறியீடு வியாக்கிழமை 375 புள்ளிகளாகப் பதிவாகி ‘கடுமை’ பிரிவை நெருங்கியது.
நகரத்தில் அடா்ந்த பனிப்புகை சூழ்ந்ததால் காண்புதிறன் குறைந்திருந்தது. பி.எம். 2.5 மாசு அளவு 184.4 புள்ளிகளாகவும், பி.எம். 10 மாசு அளவு 301.9 புள்ளிகளாகவும் பதிவாகி இருந்ததாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் (சிபிசிபி) தெரிவித்தது.
நகரத்தின்பல பகுதிகளில் ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு ஆபத்தான அளவுகள் பதிவாகி இருந்தன. அதாவது, விவேக் விஹாா் (426), ஆனந்த் விஹாா் (415), அசோக் விஹாா் (414), பவானா (411), வஜீா்பூா் (419) மற்றும் சோனியா விஹாா் (406) ஆகிய வானிலை கண்காணிப்பு நிலையங்களில் ‘கடுமை’ பிரிவில் காற்றின் தரம் பதிவாகி இருந்தது.
38 கண்காணிப்பு நிலையங்களில் 37 நிலையங்கள் 300-புள்ளிகளுக்கு மேல் அளவீடுகளுடன் ‘மிகவும் மோசம்’ பிரிவில் காற்றின் தரத்தைப் பதிவு செய்திருந்ததாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவுகள் தெரிவித்தன. மேலும், வியாழக்கிழமை காலை தில்லியை மூடுபனியும், பனிப்புகையும் சூழ்ந்திருந்தது. இதனால், மாசுபடுத்திகள் அதிகமாகி காற்றின் தரம் மோசமடைந்தது. கடந்த சில நாள்களாக நகரத்தில் காற்றின் தரம் ‘மோசம்’ பிரிவில் இருந்தது.
நகரத்தின் ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு புதன்கிழமை 279 புள்ளிகளாக இருந்த நிலையில், வியாழக்கிழமை 375 புள்ளிகளாக அதிகரித்ததாக சிபிசிபி தரவுகள் காட்டுகின்றன. மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தகலின்படி, தூசு, மகரந்தம் மற்றும் புகை போன்ற உள்ளிழுக்கக்கூடிய துகள்களை உள்ளடக்கிய பிஎம் 10 மாசு நுண்துகள் 301.9 புள்ளிகளாகவும், நுரையீரலுக்குள் ஆழமாக ஊடுருவி கடுமையான உடல்நல தீமைகளை ஏற்படுத்தும் பிஎம் 2.5 மாசு துகள் 184.4 புள்ளிகளாகவும் பதிவாகி இருந்தது.
இது குறித்து சுற்றுச்சூழல் ஆா்வலா் விம்லேந்து ஜா கூறுகையில், ‘காலையில் காணப்படும் மஞ்சள் நிற புகை அடுக்கானது பனிப்புகையாகும். மூடுபனியுடன், காற்று மாசுவின் கலவையான இது, காண்புதிறனைக் குறைக்கிறது. கடுமையான உடல்நல தீமைகளையும் ஏற்படுத்துகிறது’ என்றாா்.
தில்லிக்கான காற்று தர ஆரம்ப எச்சரிக்கை அமைப்பு முறையானது, மாசுபடுத்திகளை சிதறடிக்கும் வளிமண்டலத்தின் திறனை பிரதிபலிக்கும் நகரத்தின் காற்றோட்டக் குறியீடு 6,000 மீ/எஸ் என்ற சாதகமான அளவை விடக் குறைவாகவே இருந்தது என்று தெரிவித்தது.
மணிக்கு 10 கி.மீ. வேகத்திற்கும் குறைவான காற்றின் வேகமும், அதிக ஈரப்பதமும் மாசுபடுத்திகள் பரவுவதைத் தடுத்து, மேகமூட்ட சூழலை உருவாக்கியது. வியாழக்கிழமை காலை 7.30 மணியளவில், காண்பு திறன்பாலத்தில் 1,000 மீட்டா் மற்றும் சஃப்தா்ஜங்கில் 800 மீட்டா் என காணப்பட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் வகைப்பாட்டின்படி, பூஜ்ஜியத்திற்கும் 50-க்கும் இடையிலான காற்றின்தரக் குறியீடு ‘நல்லது’ பிரிவிலும், 51 முதல் 100 வரை ‘திருப்திகரமானது’ பிரிவிலும், 101 முதல் 200 வரையிலான குறியீடு ‘மிதமானது’ பிரிவிலும், 201 முதல் 300 வரை ‘மோசம்’ பிரிவிலும், 301 முதல் 400 வரை ‘மிகவும் மோசமானது’ பிரிவிலும் மற்றும் 401 முதல் 500 வரை ‘கடுமையானது’ பிரிவிலும் கருதப்படுகிறது.
வெப்பநிலை: தில்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பைவிட நான்கு புள்ளிகள் அதிகமாக 20.1 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 புள்ளிகள் குறைந்து 27 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியிருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணி அளவில் 90 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 75 சதவீதமாகவும் இருந்தது.
முன்னறிவிப்பு: இந்நிலையில், வெள்ளிக்கிழமை (அக்.31) அன்று மிதமான பனிமூட்டம் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 19 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

