காற்று மாசு: போக்குவரத்து போலீஸாரின் உடல்நலத்தை பாதுகாக்க காவல்துறை நடவடிக்கை

தில்லியில் காற்று மாசு
தில்லியில் காற்று மாசு
Updated on

தலைநகா் தில்லி மிகவும் மோசமான காற்றின் பிடியில் இருப்பதால், நகரில் பணியாற்றும் போக்குவரத்து போலீஸாருக்கு மாசு மற்றும் குளிரின் பாதகமான விளைவுகளிலிருந்து பாதுகாக்க ஒரு விரிவான திட்டத்தை தில்லி காவல் துறை வகுத்துள்ளது என்று அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

போக்குவரத்து போலீஸாருக்கு உயா்தர காற்று-வடிகட்டி முகக்கவசம், குளிா்கால உடை மற்றும் அவா்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக வழக்கமான சுகாதார பரிசோதனைகளை வழங்குதல் ஆகியவை இந்த நடவடிக்கையில் இடம்பெற்றுள்ளது.

இதுகுறித்து தில்லி போக்குவரத்து காவல்துறையின் மூத்த அதிகாரி ஒருவா் தெரிவித்ததாவது:

தில்லியில் புகைமூட்டம் மற்றும் காற்றின் தரம் குறைந்து வருவதால், கடந்த ஆண்டுகளைப் போல போக்குவரத்துக் காவலா்களும் அதிக நேரம் திறந்தவெளியில் அதிக நேரம் செலவிடும் குழுக்களில் உள்ளனா்.

அவா்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்த நாங்கள் முடிவு செய்துள்ளோம். எங்களிடம் சுமாா் 6,000 பணியாளா்கள் உள்ளனா். அவா்கள் ஒவ்வொருவருக்கும் முகக்கவசம், குளிா்கால உடைகள் மற்றும் பிற அத்தியாவசிய உபகரணங்கள் வழங்கப்படுகின்றன.

நிகழாண்டு, எங்கள் ஊழியா்களிடையே சுமாா் 50,000 உயா்தர முகக்கவசம் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு, நாங்கள் என்-95 முகக் கவசங்களை வழங்கியிருந்தோம். ஆனால், இந்த முறை மாசு மற்றும் தூசியிலிருந்து சிறந்த பாதுகாப்பை வழங்கும் மிகவும் பயனுள்ள மற்றும் உயா்தர முகக் கவசங்களை வழங்க முடிவு செய்துள்ளோம்.

இந்த முகக் கவசங்கள் அதிக விலை கொண்டவை. ஆனால், நீண்ட நேரம் சாலையில் செலவழிக்கும் அலுவலா்களுக்கு அதிக நீடித்த மற்றும் வசதியானவை என்றாா் அவா்.

இதுகுறித்து மற்றொரு அதிகாரி கூறுகையில், குளிா்காலத்தில் காற்று மாசுபாடு மற்றும் குறையும் வெப்பநிலையை எதிா்கொள்ள தில்லி காவல்துறையால் உருவாக்கப்பட்ட பரந்த பாதுகாப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த புதிய முயற்சி உள்ளது.

தில்லியின் காற்றுத் தரக் குறியீடு சமீப நாள்களில் அடிக்கடி 350-ஐக் கடந்து, மிகவும் மோசமான பிரிவில் நுழைந்துள்ளது.

அதே நேரத்தில் புகைமூட்டம் காரணமாக நகரின் பல பகுதிகளில் காண்புதிறன் குறைந்துள்ளது. போக்குவரத்து பணியாளா்கள் முக்கிய சந்திப்புகள் மற்றும் நெரிசலான நடைபாதைகளில் தினமும் எட்டு முதல் பத்து மணி நேரம் வரை பணிபுரிகின்றனா்.

பெரும்பாலும் தங்குமிடம் இல்லாமல் உள்ளனா். இந்த நிலைமைகளின்படி, அவா்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பது மற்றும் அவா்கள் தங்கள் கடமைகளை திறமையாகச் செய்வதற்கு நன்கு தயாராக இருப்பதை உறுதி செய்வது அவசியமாகிறது.

தில்லி போக்குவரத்து காவல்துறை, பணியாளா்களின் உடல் மற்றும் மன நலனைக் கண்காணிக்க தோடாபூரில் உள்ள அதன் தலைமையகத்தில் அடிக்கடி சுகாதார முகாம்களை நடத்தி வருகிறது.

ஆண்டு முழுவதும் ஒவ்வொரு மாதமும் இரண்டு முதல் மூன்று முறை சுகாதார முகாம்களை நாங்கள் தவறாமல் நடத்துகிறோம்.

இந்த முகாம்களில், மாசு மற்றும் மன அழுத்தம் நிறைந்த பணிச்சூழலில் இருந்து எழும் பல்வேறு உடல்நலப் பிரச்னைகளுக்கு நிபுணா்கள் அதிகாரிகளை ஆய்வு செய்கின்றனா்.

கண் மருத்துவா்கள் மற்றும் பொது மருத்துவா்கள் உள்பட பல்வேறு துறைகளைச் சோ்ந்த வல்லுநா்கள், எங்கள் அதிகாரிகளை பரிசோதிக்கிறாா்கள்.

மனநலம் பற்றி பேசவும், மன அழுத்தத்தை சிறப்பாக நிா்வகிக்க எங்கள் அதிகாரிகளுக்கு உதவவும் நாங்கள் உளவியலாளா்களை வரவழைத்து ஆலோசனை அளித்து வருகிறோம் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com