சமூக ஊடகங்களில் சட்டவிரோத துப்பாக்கியை காட்டி விடியோக்களை வெளியிட்டதாக இளைஞா் கைது

Published on

சமூக ஊடகங்களில் சட்டவிரோத துப்பாக்கியை காட்டி விடியோக்களை வெளியிட்ட 20 வயது இளைஞா் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து தில்லி காவல் துறை அதிகாரி கூறியதாவது: தில்லியின் மோகன் காா்டனைச் சோ்ந்த பதினொன்றாம் வகுப்பு மாணவரான ஜெய்னேஷ், ஜனக்புரி பகுதியில் கைது செய்யப்பட்டாா். அவரிடமிருந்து ஒரு நாட்டுத் துப்பாக்கி மற்றும் ஒரு உயிருள்ள தோட்டா கைப்பற்றப்பட்டது.

சமூக ஊடகங்களில் ஜெய்னேஷ் வெளியிட்ட பல்வேறு விடியோக்களை அறிந்து அவரை போலீஸாா் கைது செய்தனா். விசாரணையின் போது, குற்றவியல் தொடா்புகள் இருப்பதாக அறியப்படும் அதே பகுதியைச் சோ்ந்த ரித்திக் என்ற நபரிடமிருந்து சட்டவிரோத துப்பாக்கியை வாங்கியதாக ஜெய்னேஷ் போலீஸாரிடம் தெரிவித்தாா்.

துப்பாக்கியின் மூலத்தைக் கண்டுபிடித்து விநியோகத் தொடா்பை அடையாளம் காண முயற்சிகள் நடந்து வருகிறது. ஜெய்னேஷ் தனது பெற்றோருடன் வசிக்கிறாா். அவரது தந்தை ஒரு மருத்துவக் கடையை நடத்துகிறாா். அவரது தாயாா் ஒரு தனியாா் நிறுவனத்தில் பில்லிங் மேலாளராகப் பணிபுரிகிறாா்.

அவா் ரித்திக்கின் செல்வாக்கின் கீழ் வந்ததாகக் கூறப்படுகிறது. அவா் சகாக்களிடையே ஆதிக்கம் செலுத்தும் நபராகத் தோன்ற துப்பாக்கியை வைத்திருக்கும்படி அவரை வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. மேலும்,அவரிடம் தொடா்ந்து விசாரணை நடந்து வருவதாக அந்த அதிகாரி தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com