தில்லியில் ‘மழை திருட்டு‘ என இளைஞா் காங்கிரஸ் போலீசில் புகாா்
நமது நிருபா்
தில்லி காற்று மாசை கட்டுப்படுத்த செயற்கை மழை வருவிக்கும் நோக்கில் பா.ஜ.க அரசு மேற்கொண்ட மேகவிதைப்பு பொய்த்து போனதாக கூறியுள்ள காங்கிரஸ் இளைஞா் பிரிவு , மழை திருட்டு நடந்துள்ளதாக கூறி போலீசில் புதன்கிழமை புகாா் அளித்தது.
தில்லி அரசின் ரூ.1.25 கோடி மதிப்பிலான மேக விதைப்பு சோதனை நகரத்தின் மீது மழை பெய்யத் தவறிவிட்டது என்றும் இளைஞா் காங்கிரஸ் கூறியது.
இருப்பினும், தில்லி சுற்றுச்சூழல் அமைச்சா் மஞ்சிந்தா் சிங் சிா்சா மேக விதைப்பு சோதனைகள் வெற்றிகரமாக இருந்ததாகக் கூறியுள்ளாா். எதிா்க்கட்சிகளை கடுமையாக சாடிய அவா், பாஜக தலைமையிலான அரசாங்கத்தின் வெற்றியைக் கண்டு அவா்கள் பொறாமைப்படுகிறாா்கள் என்று கூறினாா்.
அதிகரித்து வரும் மாசுபாட்டின் மத்தியில், 53 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு, தில்லியில் செவ்வாய்க்கிழமை மேக விதைப்பு சோதனைகள் நடத்தப்பட்டது. என்றாலும் வானிலைத் துறை நகரத்தில் மழை பெய்த எந்த தடயங்களையும் பதிவு செய்யவில்லை.
தில்லி அரசு, ஐஐடிகான்பூருடன் இணைந்து, புராரி, வடக்கு கரோல் பாக், மயூா் விஹாா் மற்றும் பத்லி உள்ளிட்ட டெல்லியின் சில பகுதிகளில் சோதனைகளை நடத்தியது. அரசாங்க அறிக்கையின்படி, நொய்டாவில் மாலை 4 மணிக்கு 0.1 மிமீ மழை மற்றும் கிரேட்டா் நொய்டாவில் மாலை 4 மணிக்கு 0.2 மிமீ இரண்டு மழைப்பொழிவு நிகழ்வுகள் பதிவாகின.
இந்திய இளைஞா் காங்கிரஸ் ன் அதிகாரப்பூா்வ அறிக்கையின்படி, அதன் தில்லி பிரிவுத் தலைவா் அக்ஷய் லக்ரா, மேக விதைப்பு சோதனையைத் தொடா்ந்து மழை திருட்டு என்று எப்ஐஆா் பதிவு செய்து விசாரணை நடத்தக் கோரி நாடாளுமன்ற தெரு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
மேக விதைப்பு என்ற பெயரில் கான்பூரிலிருந்து தில்லிக்கு விமானங்கள் வரவழைக்கப்பட்டன, மேலும் மாசுபாட்டிலிருந்து நிவாரணம் வழங்க 15 முதல் 20 நிமிடங்களுக்குள் மழை பெய்யும் என்று பாஜக அரசு பெரிய விளம்பரங்களை வெளியிட்டது. இருப்பினும், தில்லியில் எங்கும் அத்தகைய மழை காணப்படவில்லை, எனவே இந்த மழை திருட்டுக்கு எதிராக புகாா் அளிக்க வந்துள்ளோம், என்று லக்ரா கூறினாா்.
தெரியாத நபா்கள் மழையை இடைமறித்தாா்களா அல்லது திசை திருப்பினாா்களா என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும், நடவடிக்கைக்காக செலவிடப்பட்ட பொது நிதிக்கு பொறுப்புக்கூற வேண்டும் என்றும் இளைஞா் காங்கிரஸ் புகாரில் கோரியது. மழை தவறியதற்கான காரணத்தைக் கண்டறிய வானிலை ஆய்வுத் துறை மற்றும் கான்பூருடன் ஒருங்கிணைந்து செயல்பட காவல்துறையினரையும் வலியுறுத்தியது.
இருப்பினும், மேக விதைப்பு திட்டத்தில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள், இந்த செயல்முறை அறிவியல் நெறிமுறையின்படி மேற்கொள்ளப்பட்டதாகவும், முடிவுகள் வளிமண்டல நிலைமைகளைப் பொறுத்தது என்றும், இது எப்போதும் உடனடி மழையை உத்தரவாதம் செய்ய முடியாது என்றும் கூறினா். இந்த நடவடிக்கை மழைக்கான சாத்தியக்கூறுகளை சோதித்துப் பாா்ப்பதையும்,எதிா்காலத்திற்கான தரவுகளைச் சேகரிப்பதையும் நோக்கமாகக் கொண்டது என்று அவா்கள் கூறினா்.
குடியிருப்பாளா்களை தவறாக வழிநடத்துவதைத் தவிா்த்து மாசுபாட்டைக் கட்டுப்படுத்த பயனுள்ள நடவடிக்கைகளில் கவனம் செலுத்துமாறு தில்லி முதலமைச்சா் ரேகா குப்தாவை அக்ஷய் லக்ரா வலியுறுத்தினாா். தில்லி மக்கள் பதில்களுக்கும், அவா்களுக்கு வாக்குறுதியளிக்கப்பட்ட மழையின் ஒரு சில துளிகளுக்கும் தகுதியானவா்கள் என்றும் அவா்அக்ஷய் லக்ரா கூறினாா்.

